வயநாடு துயரத்தை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வயநாடு துயரத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, “சில நாட்களுக்கு முன் நான் எனது சகோதரியுடன் வயநாடு சென்றேன். வயநாடு நிலச்சரிவின் விளைவாக ஏற்பட்ட பேரழிவு, வலி ​​மற்றும் துன்பத்தை நான் என் கண்களால் பார்த்தேன்.

மலையின் ஏறக்குறைய 2 கிலோ மீட்டர் பகுதி சரிந்து, கற்களின் ஆறாகவும், மண் ஆறாகவும் ஓடியது. இதில், 200 க்கும் மேற்பட்டோர் உயரிழிந்துள்ளனர். ஏராளமானோரை காணவில்லை. இறுதியில், இறப்பு எண்ணிக்கை 400-ஐ தாண்டலாம்.

மத்திய அரசு, மாநில அரசு, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை, மாவட்ட நிர்வாகம், வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படை, சுகாதார பணியாளர்கள் ஆகியோரின் பணிகளை பாராட்ட விரும்புகிறேன். அதேபோல் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா ஆகியவை அளித்த உதவிகளும் பாராட்டுக்குரியவை.

பல்வேறு தரப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதைப் பார்த்தேன். பல்வேறு விதமான கொள்கைகள் கொண்டவர்கள், பல்வேறு சமூக மக்கள் என ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து மற்றவர்களுக்கு உதவினார்கள்.

இது மிகப் பெரிய பேரழிவு. மத்திய அரசு ஒருங்கிணைந்த மறுவாழ்வுக்கான நிதி உதவியை வழங்க முன்வர வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். பாதிக்கப்பட்டவர்கள் இடிந்த தங்கள் வீடுகளை கட்டிக்கொள்வது உட்பட அனைத்துவிதமான மறுவாழ்வு உதவிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும். அதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இன்னும் குறிப்பாக, வயநாடு துயரத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

பல பேரழிவுகளை நான் பார்த்திருக்கிறேன். பல்வேறு இடங்களில் நிகழ்ந்த பல சம்பவங்களை பார்த்திருக்கிறேன். வயநாடு பேரழிவு மிகவும் மோசமானது. ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பிழைத்து, அவரது தாய், தந்தை, சகோதரன், சகோதரி என பலரும் உயிரிழந்த நிகழ்வுகள் பல நடந்துள்ளன. சில இடங்களில் அந்த நபர் ஒரு குழந்தையாக அல்லது முதியவராக இருக்கிறார். இது உண்மையான பேரழிவு.

வயநாடுக்கான விரிவான மறுவாழ்வு நிதி உதவியை, பேரிடரை தாங்கும் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான நிதி உதவியை வழங்கி ஆதரவளிக்குமாறு மத்திய அரசை நான் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE