வங்கதேச கலவரத்தின் பின்னணியில் சீனா, ஐஎஸ்ஐ: இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய பெருங்கடல் உலகின் 3-வது பெரிய கடல் ஆகும். சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 80%, சர்வதேச சரக்கு வர்த்தகத்தில் 40% இந்த கடல் பிராந்தியம் வழியாக நடைபெறுகிறது. தற்போது இப்பகுதியில் இந்தியா கோலோச்சி வருகிறது.

இதற்கு சவாலாக ‘ஒரே சாலை, ஒரே மண்டலம்' திட்டத்தின் கீழ் இந்தியாவின் அண்டை நாடுகளை தனது நட்பு நாடுகளாக மாற்ற சீனா முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வங்கதேசத்தின் துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களில் சீனாபெருமளவு முதலீடு செய்திருக்கிறது. எனினும் அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கே முதலிடம் அளித்து வந்தார்.

இதன்காரணமாக வங்கதேச வர்த்தகத்தில் இந்தியாவின் கை ஓங்கி இருந்தது. சுமார் 350-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் வங்கதேசத்தில் செயல்பட்டு வருகின்றன. 19,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அந்த நாட்டில் பணியாற்றி வருகின்றனர்.

ஷேக் ஹசீனா அண்மையில் கூறும்போது, “வங்கதேசத்தின் தீஸ்தா நதி மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த சீனா மிகவும் ஆர்வமாக உள்ளது. எனினும் இந்த திட்டப்பணி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படும் ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்க்க சீனா முடிவு செய்தது. இதற்காக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் அந்த நாடு ரகசியமாக கைகோத்தது. வங்கதேசத்தில் ஐஎஸ்ஐ உளவாளிகள் ஊடுருவிகலவரத்தை தூண்ட, அதற்கு தேவையான நிதியை சீனா தாராளமாக அள்ளிக் கொடுத்திருக்கிறது.

இதுகுறித்து இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

வங்கதேசத்தில் ஜமாத் - இ – இஸ்லாமி என்ற பழமைவாத அமைப்பு செயல்படுகிறது. இதன் மாணவர் பிரிவான இஸ்லாமி சத்ரஷிபிரை சேர்ந்த மாணவர்களுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு கடந்த சில ஆண்டுகளாக சிறப்பு பயிற்சிகளை வழங்கியது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள முகாம்களில் இவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டது.

ஐஎஸ்ஐ அமைப்பால் கொம்பு சீவி வளர்க்கப்பட்ட இவர்கள், வங்கதேச மாணவர் சங்க போராட்டத்தை கலவரமாக மாற்றி, பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதற்காக ஐஎஸ்ஐ அமைப்புக்கு சீனா பெரும் தொகையை வழங்கியிருக்கிறது.

தாவூத் இப்ராஹிமுக்கு தொடர்பு: வங்கதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான பிஎன்பி-யின் தலைவர் தாரிக் ரகுமான், பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசிக்கிறார். இவரும் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் மூத்த தலைவர் ஜாவித்தும் அண்மையில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் சந்தித்தனர். அப்போது ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டது.

பிஎன்பி தலைவர் தாரிக் ரகுமானுக்கும் மும்பை நிழல்உலக தாதா தாவூத் இப்ராகிமுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. துபாயில் உள்ள தாவூத்தின் சொத்துகளை தாரிக் ரகுமான் வாங்கி உள்ளார்.

வங்கதேசத்தின் சிட்டகாங்கில் அண்மையில் 10 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆயுதங்கள் இஸ்லாமி சத்ரஷிபிர் அமைப்பை சேர்ந்த மாணவர்களுக்கு அனுப்பப்பட்டவை ஆகும்.

இதன் பின்னணியில் தாரிக் ரகுமானும் தாவூத் இப்ராஹிமும் உள்ளனர். ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் ஆட்சி போன்று வங்கதேசத்தில் முஸ்லிம் பழமைவாத ஆட்சியை ஏற்படுத்த பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு தீவிர முயற்சி செய்து வருகிறது.

இவ்வாறு இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்