ஷேக் ஹசீனா இந்தியா வருவதற்கு அனுமதி அளித்தது ஏன்? - வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனாவுக்கு அனுமதி அளித்தது ஏன் என்பது குறித்து, டெல்லியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.

வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக ஆளும் கட்சிக்கு எதிராக தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து, பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா நேற்று முன்தினம்ராஜினாமா செய்தார். குடும்பத்தினருடன் நாட்டைவிட்டு வெளியேறிய அவர், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இந்நிலையில், வங்கதேச நிலைமை குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு நேற்று அழைப்பு விடுத்தது. அதன்படி, நாடாளுமன்ற கட்டிடத்தில் அனைத்து கட்சி கூட்டம் நேற்றுகாலை 10 மணிக்கு தொடங்கியது. மத்திய வெளியுறவு துறைஅமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, கிரண் ரிஜிஜு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணு கோபால், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத்பவார் அணி) சுப்ரியா சுலே உட்பட50-க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில், வங்கதேச அரசியல் சூழல், ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பது, இரு நாடுகளின் எல்லையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற ஒரே கோரிக்கையுடன் போராட்டம் தீவிரம் அடைந்தது. கடந்த 5-ம் தேதி ஊரடங்கு உத்தரவையும் மீறி தலைநகர் டாக்காவில் போராட்டக்காரர்கள் குவிந்தனர். நிலைமை மிகவும் மோசமடைந்ததால், பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு, பதவி விலக ஷேக் ஹசீனா முடிவு எடுத்துள்ளார்.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த அவர், இந்தியா வருவதற்காக தற்காலிக அனுமதி கோரினார். வங்கதேச அதிகாரிகளிடம் இருந்தும் விமான அனுமதிக்கான கோரிக்கை வந்தது. வங்கதேசத்தில் நிலைமை மோசமடைந்ததால், இந்தியா வர அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, 5-ம்தேதி மாலை அவர் இந்தியா வந்தடைந்தார். மிக குறுகிய நேரத்தில்தான், அவர் அனுமதி கோரினார். எந்தவித முன்னறிவிப்பும் இன்றியே அவர் இந்தியா வந்துள்ளார்.

வங்கதேசத்தில் உள்ள தூதரகம் மூலமாக, அங்கு வசிக்கும் இந்தியர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். அங்கு சுமார் 9 ஆயிரம் மாணவர்கள் உட்பட மொத்தம் 19,000 இந்தியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான மாணவர்கள் ஜூலை மாதமே இந்தியா திரும்பிவிட்டனர். அங்குள்ள சிறுபான்மை இந்துக்களின் நிலையையும் கண்காணித்து வருகிறோம். அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு குழுக்கள், அமைப்புகள் முயற்சியில் உள்ளன.

வங்கதேசத்தில் சட்டம் - ஒழுங்கு சீராகும் வரை தொடர்ந்துகண்காணிப்போம். வங்கதேச அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். அங்குள்ளசிறுபான்மையினர் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்ய இந்தியா முயற்சி எடுக்கும். மாணவர்கள் நாடு திரும்பவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE