இடுக்கி: வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளின் எதிரொலியாக, முல்லைப் பெரியாற்றில் புதிய அணைக் கட்ட வேண்டும் என்று கேரளாவில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையால் சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூலை 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 392 ஆக அதிகரித்துள்ளது. இன்று சூச்சிப்பாறை பகுதியில் ராணுவத்தினர் உடல்களை தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, வயநாடு நிலச்சரிவால் ஏற்பட்ட அச்சத்தை தொடர்ந்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாற்றில் புதிய அணைக் கட்ட வேண்டும் என்று கேரளாவில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் அவ்வப்போது பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை காரணம் காட்டி அங்கு புதிய அணை கட்ட வேண்டும் என்பது கேரளாவின் நிலைப்பாடு. ஆனால், முல்லைப் பெரியாறு அணை தற்போது பாதுகாப்பாக உள்ளது என்று தொடர்ந்து தமிழக அரசு கூறி வருகிறது. இது தொடர்பான நீதிமன்ற வழக்குகளிலும் தமிழகம் வென்றது. இந்த நிலையில்தான், தற்போது வயநாடு நிலச்சரிவை காரணம் காட்டி முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் என்னவாகும் என்று ஒரு கதையை அம்மாநிலத்தைச் சேர்ந்தோர் பதிவுகளாக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற பக்கங்களில் இதற்கான பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன. மேலும், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட வேண்டும் என கேரள மக்களும், அம்மாநில அரசியல்வாதிகளும் கோரிக்கைகள் வைத்துவருகின்றனர். வலைதளங்களில் இதற்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில், “முல்லைப் பெரியாறு அணையின் நிலைமை சீரமைக்க முடியாத நிலையில் உள்ளது. நிலநடுக்கமோ அல்லது மற்றொரு மேக வெடிப்போ நிகழ்ந்தால், உலகம் இதுவரை கண்டிராத மோசமான சோகத்தைக் காணும்" என்று பதிவிட்டுள்ளார்.
» “வங்கதேசத்தில் சிறுபான்மையினர் நிலையை கண்காணிக்கிறோம்” - நாடாளுமன்றத்தில் ஜெய்சங்கர் விவரிப்பு
» ஆயுள் காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டிக்கு எதிராக இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
இதேபோல், விகாஸ் சரஸ்வத் என்பவர், “கேரளாவில் 2018 வெள்ளம், இதோ இப்போது 2024ல் வயநாடு நிலச்சரிவு சோகம். 130 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு என்றாவது ஒரு நாள் உடைந்தால்... இதை நினைத்தாலே நடுங்குகிறது. முல்லைப் பெரியாறு உடைந்தால் குறைந்தது நான்கு ஐந்து மாவட்டங்கள் நீரில் மூழ்கும். தமிழகமும் கேரளாவும் சரியான நேரத்தில் தீர்வு காண வேண்டும். கேரளா கூறுவது போல் மாற்று நீர்த்தேக்கங்கள் அல்லது புதிய அணை கட்ட வேண்டும். தாமதிக்காமல் இப்போதே ஏதாவது செய்யத் தொடங்குங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
அர்ஜுன் என்பவரோ, “பேரழிவு தடுப்பு வழிமுறைகளைத் திட்டமிட்டு செயல்படுத்துவதற்கு பதிலாக, ஏதாவது ஒன்று நடக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று கேரள அரசு விரும்புகிறது. முல்லைப் பெரியாறு அணை நீர் குண்டு போல் காட்சியளிக்கிறது. இதுதொடர்பாக பல எச்சரிக்கைகளும் வெளியாகிவிட்டது. அணை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும். ஏனென்றால், அணையின் ஆயுள் காலாவதியாகிவிட்டது” என்று எச்சரிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
அக்சய் என்பவரோ, “முல்லைப் பெரியாறு அணை விவகாரம் முக்கியமானது. இதனை உடனடியாக அகற்றி தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இது 3.5 மில்லியன் மக்களுக்குப் பாதுகாப்புப் பிரச்சினை” என்று கூறியுள்ளார்.
The Mullaperiyar Dam issue is critical. The government must take immediate steps to decommission it and take necessary actions. This is a matter of safety for 3.5 million people. @PMOIndia @narendramodi @nitin_gadkari
— Akshay krishna kumar (@kudos_kk) August 5, 2024
இவர்கள் மட்டுமல்ல, இன்னும் பலர் இதனை ஒரு பிரச்சாரமாக முன்னெடுத்து வருகின்றனர். #DecommissionMullaperiyarDam #SaveKerala #savemullaperiyar என்ற ஹேஷ்டேக்குகளையும் முல்லைப் பெரியாறு அணையின் புகைப்படம், அணையின் பாதுகாப்பு தொடர்பான கட்டுக்கதைகள், அணை உடைந்தால் என்னவாகும் என்பது தொடர்பான வீடியோக்கள் என்று இந்த பிரச்சாரம் அதிகரித்து வருகிறது.
#Mullaperiyar
— Nidhish (@Ohmaa_Tokita) August 3, 2024
The ticking waterbomb over Kerala.. pic.twitter.com/zkx2djpToH
கேரள அரசு கூறுவது என்ன? - கேரள மாநில அரசு முல்லைப் பெரியாறு தொடர்பாக எழுந்து வரும் இந்த பிரச்சாரங்கள் குறித்து இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இடுக்கி மாவட்ட கலெக்டர் சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில், "முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஆக.3-ம் தேதி மாலை நான்கு மணி வரை 131.75 அடியாக உள்ளது. தற்போதைய விதிமுறைப்படி நீர்மட்டம் 137 அடியை எட்டினால் மட்டுமே அணையை திறக்க வேண்டும். அணைப்பகுதியில் பெய்யும் மழையும், அணைக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது. ஷட்டரை திறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும்.
சமூக வலைதளங்களில் மக்களை பயமுறுத்தும் வகையில் பரப்புரைகள் செய்யப்பட்டு வருகின்றனர். எனினும், உண்மைகள் அரசால் தெளிவுபடுத்தப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்கள் புதிய யுகத்தின் சக்திவாய்ந்த நாக்கும் ஆயுதமும். எனவே, அதை சரியாக பயன்படுத்த முயற்சிப்போம்." என்று தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை பின்னணி: மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்கு நோக்கி பாயும் பெரியாறு அரபிக் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் நீரை கிழக்கு நோக்கி திருப்பி தமிழகத்தின் தென்மாவட்டங்கள் பயன் அடைவதற்காக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1893-ம் ஆண்டில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. இந்த அணையின் கொள்ளளவு 15.5 டிஎம்சி ஆகும். இதன் உயரம் 155 அடி ஆகும். கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டத்தில் அணை அமைந்துள்ளது. தமிழக பொதுப் பணித் துறை அணையை பராமரித்து வருகிறது.
இந்தச் சூழலில் முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு அணையின் உறுதித் தன்மையை உறுதி செய்தது.
எனினும், முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட கடந்த 2021-ம் ஆண்டில் கேரள அரசு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்தது. தமிழகத்தின் கடும் எதிர்ப்பால் அப்போது புதிய அணை கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரள அரசு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புதிதாக திட்ட அறிக்கையை தயார் செய்துள்ளது. இதன்படி புதிய அணை கான்கிரீட் கலவையால் கட்டப்படும். அணையின் நீளம் 438 மீட்டர், உயரம் 53.63 மீட்டராக இருக்கும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 624.5 சதுர கி.மீ. ஆக இருக்கும் என்று திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago