“வங்கதேசத்தில் சிறுபான்மையினர் நிலையை கண்காணிக்கிறோம்” - நாடாளுமன்றத்தில் ஜெய்சங்கர் விவரிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டம், போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா, அவரது இந்திய வருகை, தற்போதைய வங்கதேச நிலைமை உள்ளிட்டவை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று மாநிலங்களவையில் அறிக்கை வாசித்தார். குறிப்பாக, வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் நிலை (பெரும்பாலும் இந்துக்கள்) குறித்து நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியது: “இந்தியா - வங்கதேச உறவு என்பது மிகவும் நெருக்கமானது. இந்த நெருக்கம் பல பத்தாண்டுகளாகவும், பல அரசுகளுக்கு இடையேயும் இருந்து வருகிறது. சமீபத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை அங்கு நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜனவரி 2024-ல் வங்கதேசத்தில் தேர்தல் நடந்ததில் இருந்து குறிப்பிடத்தக்க அளவிலான பதற்றம், ஆழமான பிளவுகள் வங்கதேச அரசியலில் ஏற்பட்டன.

இந்தப் பின்னணியில் மாணவர்கள் போராட்டம் ஜூன் மாதம் தொடங்கியது. இந்தப் போராட்டத்தின்போது வன்முறைகள் ஏற்பட்டன. பொதுக் கட்டிடங்கள், கட்டமைப்புகள் தாக்கப்பட்டன. இந்த வன்முறை ஜூலை முழுவதும் தொடர்ந்தது. பேச்சுவார்த்தை மூலம் நிலைமையை தணிக்க நாம் ஆலோசனை வழங்கினோம். நம்மோடு தொடர்பில் இருக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளிடமும் இதை வலியுறுத்தினோம். ஜூலை 21 அன்று வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போராட்டத்தை தீவிரப்படுத்தின. இந்தப் போராட்டம் ஒரே ஒரு இலக்கை கொண்டிருந்தது. அது, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்பதுதான்.

ஆகஸ்ட் 4ல் என்ன நடந்தது? - ஆகஸ்ட் 4-ம் தேதி நடந்த போராட்டங்களின்போது காவல் துறையினர் தாக்கப்பட்டனர். காவல் நிலையம், அரசு கட்டிடங்கள் உள்ளிட்டவையும் தாக்கப்பட்டன. வன்முறை மிகவும் தீவிரமடைந்தது. ஆட்சியாளர்ளோடு தொடர்புடைய தனிநபர்களின் சொத்துக்கள் நாடு முழுவதும் குறிவைக்கப்பட்டன. மிகவும் குறிப்பிடத்தக்க கவலை என்னவென்றால், சிறுபான்மையினரின் வணிகம் மற்றும் கோயில்கள் நாட்டின் பல்வேறு இடங்களிலும் தாக்குதலுக்குள்ளாகின.

ஆகஸ்ட் 5-ல் என்ன நடந்தது? - நமது புரிதல் என்னவென்றால், வங்தேசத்தின் பாதுகாப்பு கட்டமைப்புகளின் தலைவர்களோடு ஆலோசனை நடத்திய பிரதமர் ஷேக் ஹசீனா, அதனைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினமா செய்ய முடிவு செய்தார். ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வர விரும்புவதாகவும், உடனடியாக அனுமதிக்குமாறும் மிக குறுகிய கால அவகாசத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேநேரத்தில், விமானம் இந்தியாவுக்குள் வருவதற்கான அனுமதியை அதற்கான அதிகாரிகள் கோரினர். இதையடுத்து நேற்று மாலை அவர் டெல்லி வந்தடைந்தார்.

வங்கதேசத்தில் நிலைமை தொடர்ந்து பதற்றம் நிறைந்ததாகவே உள்ளது. ராணுவத் தலைமைத் தளபதி ஆகஸ்ட் 5-ம் தேதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். பொறுப்பை ஏற்பதாகவும், இடைக்கால அரசை அமைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களோடு நமது அரசு நமது தூதரகங்கள் மூலம் நெருக்கமான தொடர்பில் இருக்கிறது. 19 ஆயிரம் இந்தியர்கள் அங்கு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் 9 ஆயிரம் பேர் மாணவர்கள். மாணவர்களில் பலர் கடந்த ஜூலை மாதமே இந்தியாவுக்கு திரும்பினர்.

வங்கதேசத்தில் உள்ள நமது தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்களுக்கு புதிய அரசு உரிய பாதுகாப்பை வழங்கும் என்பது நமது எதிர்பார்ப்பு. நிலைமை சீரடைந்ததும் அவை வழக்கமான முறையில் செயல்படும். வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் நிலை (பெரும்பாலும் இந்துக்கள்) குறித்து நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் நலத்துக்காக பல்வேறு குழுக்கள் செயல்பட்டு வருவதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. நாம் அதை வரவேற்கிறோம்.

வங்கதேசத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை மேம்பட வேண்டும் என்ற கவலையை நாம் தெரிவித்துக்கொள்கிறோம். நமது எல்லைப் படைகளும் விதிவிலக்கான முறையில் உஷாராக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் டாக்காவில் உள்ள அதிகாரிகளோடு நாம் தொடர்பில் இருக்கிறோம். இதுதான் தற்போதைய நிலை. நமது நெருங்கிய அண்டை நாடான வங்கதேசத்தில் நிலைமை மேம்படவும், இயல்புநிலை திரும்பவும் இந்த அவை தனது ஆதரவை வழங்க வேண்டும்" என்றார்.

பின்னணி என்ன? - கடந்த 1971-ல் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடாக உதயமானது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு வங்கதேச அரசு சார்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பின்தங்கிய மாவட்டங்கள், பெண்கள், சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன்படி பல்வேறு பிரிவினருக்கு 56% இடஒதுக்கீடும், பொது பிரிவினருக்கு 44% இடஒதுக்கீடும் அமலில் இருந்தது. இந்த இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து வங்கதேச கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் கடந்த ஜூனில் போராட்டம் தொடங்கினர். இதில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். 2,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதுதொடர்பான வழக்கை கடந்த ஜூலை 21-ம் தேதி விசாரித்த வங்கதேச உச்ச நீதிமன்றம், வங்கதேச சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்தது. சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு 2 சதவீத ஒதுக்கீடு வழங்கவும் உத்தரவிட்டது. இதன்படி கல்வி, அரசுப் பணிக்கான இடஒதுக்கீடு 7 சதவீதமாக குறைக்கப்பட்டது. எஞ்சிய 93 சதவீதம் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மாணவர்களின் போராட்டம் ஓய்ந்தது.

இந்த சூழலில், போராட்டத்தை முன்னின்று நடத்திய 6 பேரை போலீஸார் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றுவிசாரித்தனர். இதில், மாணவர் சங்க மூத்த தலைவர்கள் நஷித் கான், ஆசிப் முகமது, அபுபக்கர் மஜும்தார் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சமூக வலைதளங்களில் இதுதொடர்பான வீடியோக்கள் பரவியதால், வங்கதேசம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் மீண்டும் வலுத்தது.

பிரதமர் ஷேக் ஹசீனா உடனே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் ஏற்பட்ட மோதலில் கடந்த சிலநாட்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தலைநகர் டாக்கா உட்பட நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டன. சிராஜ்கஞ்ச் காவல் நிலையத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், 14 போலீஸாரை படுகொலை செய்தனர். டாக்காவில் 2 முன்னணி நாளிதழ்களின் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்துக்கள் மீது தாக்குதல்: பல்வேறு பகுதிகளிலும், சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் அவர்களது வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. பல்வேறு நகரங்களிலும் இஸ்கான் கிருஷ்ணர் கோயில், காளி கோயில்கள் தாக்கப்பட்டன. ரங்பூர் மாநகராட்சி கவுன்சிலர்களான இந்து மதத்தை சேர்ந்த ஹராதன் ராய், கஜோல்ராய் ஆகிய 2 பேரும் வன்முறை கும்பலால் கொலை செய்யப்பட்டனர். ராய்கஞ்ச் பத்திரிகை மன்றத்துக்குள் நுழைந்த வன்முறை கும்பல், பிரதீப்குமார் என்ற செய்தியாளரை கொடூரமாக கொலை செய்தது.

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் பெரும் கலவரமாக வெடித்த நிலையில், தலைநகர் டாக்காவில் நாடாளுமன்றம், பிரதமர் இல்லத்துக்குள் வன்முறை கும்பல் புகுந்து சூறையாடியது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்