வங்கதேசத்தில் திடீர் ராணுவ ஆட்சி: பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் பெரும் கலவரமாக வெடித்த நிலையில், தலைநகர் டாக்காவில் நாடாளுமன்றம், பிரதமர் இல்லத்துக்குள் வன்முறை கும்பல் புகுந்து சூறையாடியது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த 1971-ல் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடாகஉதயமானது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர்தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு வங்கதேச அரசு சார்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பின்தங்கிய மாவட்டங்கள், பெண்கள், சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன்படி பல்வேறு பிரிவினருக்கு 56% இடஒதுக்கீடும், பொது பிரிவினருக்கு 44% இடஒதுக்கீடும் அமலில் இருந்தது.

இந்த இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து வங்கதேச கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் கடந்த ஜூனில் போராட்டம் தொடங்கினர். இதில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். 2,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதுதொடர்பான வழக்கை கடந்தஜூலை 21-ம் தேதி விசாரித்த வங்கதேச உச்ச நீதிமன்றம், வங்கதேச சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்தது. சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு 2 சதவீத ஒதுக்கீடு வழங்கவும் உத்தரவிட்டது. இதன்படி கல்வி, அரசுப் பணிக்கான இடஒதுக்கீடு 7 சதவீதமாக குறைக்கப்பட்டது. எஞ்சிய 93 சதவீதம் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மாணவர்களின் போராட்டம் ஓய்ந்தது.

இந்த சூழலில், போராட்டத்தை முன்னின்று நடத்திய 6 பேரை போலீஸார் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றுவிசாரித்தனர். இதில், மாணவர் சங்கமூத்த தலைவர்கள் நஷித் கான், ஆசிப் முகமது, அபுபக்கர் மஜும்தார் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சமூக வலைதளங்களில் இதுதொடர்பான வீடியோக்கள் பரவியதால், வங்கதேசம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் மீண்டும் வலுத்தது. பிரதமர் ஷேக் ஹசீனா உடனே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த போலீஸார் தீவிரநடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் ஏற்பட்ட மோதலில் கடந்த சிலநாட்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தலைநகர் டாக்கா உட்பட நாடுமுழுவதும் பல்வேறு காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டன. சிராஜ்கஞ்ச் காவல் நிலையத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், 14 போலீஸாரை படுகொலை செய்தனர். டாக்காவில் 2 முன்னணி நாளிதழ்களின் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்துக்கள் மீது தாக்குதல்: பல்வேறு பகுதிகளிலும், சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் அவர்களது வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. பல்வேறு நகரங்களிலும் இஸ்கான் கிருஷ்ணர் கோயில், காளி கோயில்கள் தாக்கப்பட்டன. ரங்பூர் மாநகராட்சி கவுன்சிலர்களான இந்து மதத்தை சேர்ந்த ஹராதன் ராய், கஜோல்ராய் ஆகிய 2 பேரும் வன்முறை கும்பலால் கொலை செய்யப்பட்டனர். ராய்கஞ்ச் பத்திரிகை மன்றத்துக்குள் நுழைந்த வன்முறை கும்பல், பிரதீப்குமார் என்ற செய்தியாளரை கொடூரமாக கொலை செய்தது.

இந்நிலையில், தலைநகர் டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனாவின் அவாமிலீக் கட்சி அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. வங்கதேச தந்தை முஜிபுர் ரகுமானின் சிலை அடித்து நொறுக்கப்பட்டது. போராட்டத்தின் உச்சகட்டமாக டாக்காவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்குள் வன்முறை கும்பல் நேற்று நுழைந்தது. டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ வீட்டிலும் ஆயிரக்கணக்கானோர் நுழைந்தனர்.

கலவரம் அதிகரித்த நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா தனது குடும்பத்தினருடன் டாக்காவில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு, வங்கதேச விமானப் படை தளத்துக்கு சென்றார். அங்கிருந்து சி-130 விமானம் மூலம் நாட்டைவிட்டு வெளியேறினார்.

முன்னதாக, தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்ற ராணுவத்திடம் அனுமதி கோரினார். ஆனால், அவரது கோரிக்கையை ராணுவ தலைமை நிராகரித்துவிட்டது.

இந்த பரபரப்பான சூழலில், நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலமாக வங்கதேச ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான் உரையாற்றினார்.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டு ஷேக் ஹசீனா வெளியேறிவிட்டதாக தெரிவித்தார். வங்கதேசத்தின் முழு பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

‘‘விரைவில் அனைத்து கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்படும். 18 பேர் அடங்கிய குழு ஆட்சி,நிர்வாகத்தை கவனிக்கும். இப்போதைய சட்டம் - ஒழுங்கு பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அதிபர் முகமது சகாபுதீனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இனிமேல் மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படாது. அவர்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். அவர்கள்போராட்டத்தை கைவிட வேண்டும்.போராட்டத்தில் நடந்த உயிரிழப்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்படாது’’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, டாக்காவில் ஷேக்ஹசீனாவின் வீட்டுக்குள் நுழைந்த கும்பல், அங்கிருந்த விலை உயர்ந்தகலைப் பொருட்கள், பரிசுப் பொருட்கள், பண்ணையில் வளர்க்கப்பட்ட கோழிகள், மீன்கள் ஆகியவற்றை சூறையாடின. இதுதொடர்பான வீடியோக்களும் வலைதளங்களில் பரவி வருகின்றன.

தலைநகர் டாக்காவில் நேற்று சுமார் 4 லட்சம் போராட்டக்காரர்கள் குவிந்திருந்தனர். போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்தது. மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். டாக்கா விமான நிலையம் மூடப்பட்டது. நாடு முழுவதும் 3,500-க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டு உள்ளன. அந்த நாட்டில் பல லட்சம் கோடி அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

மாணவர்களின் தொடர் போராட்டத்தால் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

இதற்கிடையே, வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா (76) மற்றும் அவரது குடும்பத்தினருடன் புறப்பட்ட விமானம், டெல்லி அருகே உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் நேற்று மாலை தரையிறங்கியது. ஷேக் ஹசீனாவை தேசிய பாதுகாப்புஆலோசகர் அஜித் தோவல் வரவேற்றார். ஹசீனாவுடன் அவரது தங்கை ஷேக் ரெகனாவும் வந்துள்ளார்.

ஹசீனாவின் மூத்த மகன் ஷாஜிப் வாஸத் ஜாய், அமெரிக்காவின் வர்ஜினியா மாநிலம் பால்ஸ் சர்ச் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இளைய மகள் சைமா வாஸத், உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குநராக உள்ளார். அவர் தற்போது குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவை குழுவுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை: இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்சமடைந்துள்ள நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடியுடன் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, வங்கதேச நிலவரம் குறித்து பிரதமரிடம் அவர் எடுத்துரைத்தார். பிரதமர் இல்லத்தில் பாதுகாப்புக்கான அமைச்சரவை கமிட்டி நேற்று இரவு கூடி ஆலோசனை நடத்தியது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்று, வங்கதேச நிலவரம் குறித்து விளக்கினார்.

இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவும், வங்கதேசமும் 4,096 கி.மீ எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. வங்கதேசத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் இந்திய எல்லை பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு படை இயக்குநர் (பொறுப்பு) தல்ஜித் சிங் சவுத்ரி மற்றும் மூத்த தளபதிகள் விமானம் மூலம் கொல்கத்தா சென்று, எல்லை பாதுகாப்பு நிலவரம் குறித்து பிராந்திய தளபதிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினர். டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்