கன்வர் யாத்திரையின்போது பிஹாரில் மின்சாரம் பாய்ந்து 9 பக்தர்கள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

பாட்னா: வட மாநிலங்களில் சிவ பக்தர்கள் மேற்கொள்ளும் வருடாந்திர காவடி யாத்திரை (கன்வர் யாத்ரா) கடந்த மாதம் தொடங்கியது. ஆகஸ்ட் 22-ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெற உள்ளது. கங்கை நதியை ஒட்டியுள்ள புனிததலங்களுக்கு சிவ பக்தர்கள் பயணம் செய்து, அங்கு கலசங்களில் நீரை சேகரித்து வந்து தங்கள்ஊர்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் பிஹாரின் வைசாலி மாவட்டம் சுல்தான்பூர் என்ற கிராமத்தில் கன்வர்யாத்திரை மேற்கொண்டிருந்த பக்தர்களின் வாகனம் மீது உயரழுத்த மின்கம்பி உரசியது. இதில் 9 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நிகழ்ந்தது. சோனேபூரில் உள்ள பாபா ஹரிஹர் நாத் கோயிலுக்கு பக்தர்கள் ஜலாபிஷேகம் செய்யச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டது. இதில் 8 பேர்சம்பவ இடத்திலும் ஒருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். 3 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 1-ம் தேதி கன்வர் யாத்திரை பக்தர்கள் சென்ற சரக்கு வேன் சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இதில் 5 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதற்கு முன் ம.பி.யின் மொரேனா மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி கன்வர் யாத்திரை பக்தர்கள் சென்ற டிராக்டர் டிராலி மீது கன்டெய்னர் லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE