வயநாடு நிலச்சரிவில் சிக்கிய பலரை மீட்டவர் மாயம்

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கிய பலரை தனது உயிரை பணயம்வைத்து மீட்டவர் மாயமாகி உள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையால் சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜூலை 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். இவர்களை மீட்கும் பணியில் தன்னார்வலர்கள், மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

அந்த வகையில், சூரல்மலை கிராமத்தைச் சேர்ந்த லாட் பிரஜீஷ் என்பவரும் நிலச்சரிவில் சிக்கிய பலரின் விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றி உள்ளார். ஆனால் அவர் இப்போது காணாமல் போய் உள்ளார். நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பே சூரல்மலை பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ள பிரஜீஷை சூப்பர்ஹீரோ என அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.

இதுகுறித்து சூரல்மலை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, “முண்டக்கை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதாக முதலில் தகவல் கிடைத்ததும் பிரஜீஷ் தனதுஜீப்பில் மலைப்பகுதிக்கு 2 முறைசென்று அங்கு சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டு வந்தார்.அதன் பிறகு தனது குடும்பத்தினருடன் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.

அப்போது ஒரு செல்போன் அழைப்பு வந்தது. இதையடுத்து, 3-வது முறையாக ஜீப்பில் மலைப் பகுதிக்குச் சென்றார். அதன் பிறகுஅவர் திரும்பி வரவே இல்லை. பின்னர் அவருடைய ஜீப் சேதமடைந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. ஆனால் பிரஜீஷ் என்ன ஆனார் என இதுவரை தெரியவில்லை” என்றார்.

மற்றொரு கிராமவாசி கூறும்போது, “எங்கள் ஊரில் நடக்கும் அனைவருடைய குடும்ப நிகழ்ச்சியிலும் பிரஜீஷ் கலந்து கொள்வார். திருமணமாக இருந்தாலும் ஒருவரின் மரணமாக இருந்தாலும் அந்தநிகழ்ச்சியின் தொடக்கம் முதல் இறுதி வரையில் உடன் இருந்து தேவையான உதவிகளை செய்வார். என் மகளின் திருமணத்துக்கும் உதவினார். அவரை இழந்துவிட்டோம்” என்றார்.

சட்டவிரோத சுரங்க நடவடிக்கையே காரணம்: மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி:

வயநாடு பகுதியில் கேரள அரசின் ஆதரவுடன் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மேலும் மனிதர்கள் அங்கு குடியேறுவதும் சட்டவிரோதமாக நடைபெற்று வருகிறது. இதற்கு அங்குள்ள உள்ளூர் அரசியல்வாதிகள் உதவி வருகின்றனர். சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் அங்கு ஆக்கிரமிப்புகள் நடக்கின்றன.

சட்டவிரோதமாக இடங்களை ஆக்கிரமித்து அங்கு வீடுகள் கட்டப்படுகின்றன. இதுதொடர்பாக ஆய்வு செய்ய முன்னாள் வனத்துறை தலைமை இயக்குநர் சஞ்சய் குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் ஆதரவுடன் அங்கு தொடர்ந்து சட்டவிரோத குடியேற்றம், சட்டவிரோத சுரங்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு கேரள அரசுதான் முழு காரணம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE