வயநாட்டில் மகளின் ஒரு கைக்கு இறுதிச் சடங்கு செய்த தந்தை

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: வயநாட்டைச் சேர்ந்தவர் ராமசாமி. கடந்த வாரம் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் அவரது மகள் ஜிசா மாயமானார். பல்வேறு கட்டத் தேடுதல் பணிக்குப் பிறகு ஜிசாவின் ஒரு கை மட்டும் கிடைத்தது. அவரது விரலில் திருமண மோதிரமும், அதில் அவரது கணவர் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது. இதை வைத்து அது தன் மகள் ஜிசாவின் கைதான் என்பதை தந்தை ராமசாமி உறுதி செய்தார்.

தன் மகளின் ஒரு கைக்கு இறுதிச் சடங்கு செய்யும் ராமசாமியின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மகள் ஜிசாவின் ஒரு கை வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு தகன மேடையில் வைக்கப்பட்டிருக்கிறது. அதைப் பார்க்கும் ராமசாமி தன் முகத்தை மூடியபடி கதறி அழுகிறார். பார்ப்பவர்களை கண்கலங்கச் செய்யக்கூடியதாக அந்தப் புகைப்படம் உள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29-ம் தேதி பெய்த கனமழையால், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்தன. காட்டாற்று வெள்ளத்தில் வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டன.

இதுவரையில் 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE