வயநாடு நிலச்சரிவு பலி 350 ஆக அதிகரிப்பு: கடற்படையின் மீட்புப் பணி நிலவரம் என்ன? - அரசு விளக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி / வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடரும் கடற்படையின் பங்களிப்பு குறித்து மத்திய அரசு விவரித்துள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மோசமான வானிலை, கடினமான நிலப்பரப்பு அமைப்புகளுக்கு மத்தியில், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய கடற்படை மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முழு வீச்சில் தீவிரமாகத் தொடர்கிறது. நிவாரண முயற்சிகளை அதிகரிக்கவும், பேரழிவால் பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்களுக்கு ஆதரவளிக்கவும் கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது 78 கடற்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் குழுக்கள் சூரல்மலா, முண்டக்கை பகுதிகளின் பல இடங்களில் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், பேரிடர் நிவாரணப் படையினர், உள்ளூர் நிர்வாகத்துடன் கைகோர்த்து செயல்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், உணவு மற்றும் இதர பொருட்களை தொடர்ந்து வழங்குவதற்காக ஒரு குழு செயல்படுகிறது. மற்ற குழுக்கள் பிழைத்தவர்களைத் தேடுதல், இடிபாடுகளை அகற்றுதல், உடல்களை மீட்டெடுக்கும் பணி போன்றவற்றில் ஈடுபடுகின்றது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக சூரல்மலாவில் மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.

3 அதிகாரிகள், 30 மாலுமிகளைக் கொண்ட ஒரு குழு, ஆகஸ்ட் 1 அன்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலா, முண்டக்கை பகுதிகளை இணைக்கும் ஆற்றின் மீது முக்கியமான பெய்லி பாலத்தை நிர்மாணிப்பதில் இந்திய ராணுவத்துக்கு உதவியது. கனரக இயந்திரங்கள், ஆம்புலன்ஸ்களின் இயக்கத்துக்கு உதவும் போக்குவரத்தின் முதுகெலும்பாக இந்தப் பாலம் செயல்படுகிறது. ஆகஸ்ட் 2 அன்று, கோழிக்கோட்டில் இருந்து இயக்கப்படும் ஐஎன்எஸ் கருடாவின் இந்திய கடற்படையின் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வான்வழி மீட்புப் பணியை மேற்கொண்டது.

சிக்கித் தவிக்கும் மக்களை விரைவாக வெளியேற்றுதல், அடிப்படை வசதிகள், மருத்துவ உதவிகளை வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்திய கடற்படை உள்ளூர் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது’ என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேடுதல் பணி தீவிரம்: வயநாடு நிலச்சரிவு உயிரிழப்பு 350 ஆக அதிகரித்துள்ள நிலையில், 341 பிரேத பரிசோதனைகள் முடிந்துள்ளதாகவும், அதில் 146 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்தின் குழு ஒன்று வியாழனன்று 190 அடி நீளமுள்ள பெய்லி பாலத்தின் கட்டுமானப் பணிகளை முடித்தது. இதன்மூலம், கனரக இயந்திரங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் செல்ல வசதியாக, தேடுதல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

நிவாரண முகாம்: மேப்பாடியில் உள்ள 17 நிவாரண முகாம்களில் 707 குடும்பங்களைச் சேர்ந்த 2,597 பேர் தங்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் உள்ள 91 முகாம்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் தங்கியுள்ளனர். உயிர் பிழைத்தவர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பேரிடரின் பின்விளைவுகளைக் கையாளும் அதிகாரிகளுக்கு உளவியல் ஆதரவை வழங்குவதற்காக மனநலப் பேரிடர் மேலாண்மைக் குழுவை மாநில அரசு உருவாக்கியுள்ளது.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ மேஜர் ஜெனரல் வி.டி.மேத்யூ கூறும்போது, “பாதிக்கப்பட்ட இடங்களில் சிக்கியிருந்த மக்களை மீட்கும் பணி ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டது. இப்போது உடல்களைத் தேடும் பணியில் மட்டுமே ஈடுபட்டிருக்கிறோம். எனினும், தெர்மல் ஸ்கேனரை பயன்படுத்தி, யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்றும் தேடி வருகிறோம்” என்றார். அதேவேளையில், நிலச்சரிவு பேரிடரில் இதுவரை 206 பேர் காணாமல் போயுள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்