வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடகா 100 வீடுகளை கட்டித் தரும்: முதல்வர் சித்தராமையா

By செய்திப்பிரிவு

பெங்களூரு: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு கர்நாடகா ஆதரவாக நிற்கிறது. கர்நாடகாவின் ஆதரவையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடகா 100 வீடுகள் கட்டித் தரும் என்பதையும் முதல்வர் பினராயி விஜயனிடம் உறுதிபட தெரிவித்துள்ளேன். நாம் ஒன்றாக இணைந்து மீண்டெழுவோம்; நம்பிக்கையை மீட்டெடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

முதல்வர் சித்தராமையாவின் இந்த அறிவிப்புக்கு வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இக்கட்டான நிலையில் இருக்கும் வயநாட்டுக்கு தாராளமாக ஆதரவளித்த கர்நாடக மக்களுக்கும் மாநில அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 வீடுகளை கட்டித் தருவதற்கான உங்கள் உறுதியளிப்பு, மறுவாழ்வு முயற்சிகளில் குறிப்பிடத்தக்க படியாகும். இந்தியர்களின் கருணையும் ஒற்றுமையும் இணைந்த வலிமைதான் வயநாட்டுக்கு இப்போது தேவை” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் சித்தராமையாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சித்தராமையாவின் பதிவை இணைத்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடக மக்களின் இந்த கருணை மற்றும் மனிதாபிமான நடவடிக்கைளுக்கு எனது நன்றி" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE