ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பழங்குடியினர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்ட எல்லையில் உள்ள சில கிராமங்களில் சாலை போக்குவரத்து சரியில்லாத காரணத்தினால், அப்பகுதி மக்கள் தினமும் படகில் சென்றுதான் பிழைப்பு நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் போலாவரம் பகுதியில் இருந்து ‘லட்சுமி வெங்கடேஸ்வரா சர்வீஸ்’ எனும் தனியார் படகில் கொண்டமொகுலு எனும் பகுதியில் உள்ள சந்தைக்கு 52 பேர் சென்றனர். அப்போது, அந்த படகில் சிமெண்ட் மூட்டைகள், பைக்குகளும் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இதில் படகு ஓட்டுநர்கள் 5 பேர் இருந்தனர். ஆதலால், படகில் மொத்தம் 57 பேர் இருந்துள்ளனர்.
இந்நிலையில், திடீரென அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததது. இதனால், படகில் இருந்த கதவுகள் அடைக்கப்பட்டன. மேல் தளத்தில் சுமார் 15 பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது பலத்த சூறாவளி காற்று வீசியதில் படகு நிலை தடுமாறி மண்டூர் பகுதியில் கோதாவரி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அப்போது, கதவு அடைக்கப்பட்டிருந்ததால், அனைவரும் படகில் சிக்கினர். படகின் மேல் தளத்தில் இருந்த 15 பேரும் குதித்து நீச்சல் அடித்து கரை சேர்ந்தனர். அப்பகுதியில் செல்போன் கோபுரம் வேலை செய்யாத காரணத்தால், இந்த தகவல் அன்றைய தினம் இரவுதான் தெரியவந்தது. அதன் பின்னர், போலீஸார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும், தேசிய மீட்புக் குழுவினரும் நேற்று அதிகாலை சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். விசாகப்பட்டினத்தில் இருந்து கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டு, படகு கவிழ்ந்த இடத்தில் தேடத் தொடங்கினர். மேற்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர் கார்திகேய மிஸ்ரா, எஸ்.பி விஷால் குண்ணி ஆகியோர் தலைமையில் 22 மீட்பு படகுகளில் பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று அதிகாலை முதல் மூழ்கிய படகை தேடினர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று பார்வையிட்டார். படகு விபத்து நிகழ்ந்த இடத்தை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். அதன் பின்னர் கிரேன்கள் மூலம் கயிற்றின் உதவியோடு 60 அடி ஆழத்தில் இருந்த படகு மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த படகில் 22 பேரின் சடலங்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் சடலங்களை மீட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். ஆனால்,மேலும் 20 பேர் காணாமல் போயிருப்பதாக சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் முறையிட்டதால், தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, படகு உரிமையாளர் காஜா மொய்தீன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். மேலும், போலீஸார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்தவர்கள் அனைவரும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலும், பெண்கள், சிறுவர்கள் ஆவர்.
ரூ. 10 லட்சம் நிதி உதவி
சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு வேலை வாய்ப்பு, இலவச கல்வி வழங்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் இறந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். உடனடியாக ரூ. 1 லட்சம் அவர்களின் குடும்பத்தாரிடம் வழங்கப்படும். விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago