யானைகளின் கருணையால் உயிர் பிழைத்த குடும்பம் @ வயநாடு

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: முண்டக்கையில் உள்ள ஹாரிசன்ஸ் தேயிலை தோட்டத்தில 18 ஆண்டுகளாக தேயிலை பறிக்கும் தொழிலாளி சுஜாதா அனிநஞ்சிரா. இவர், தனது மகள் சுஜிதா, மருமகன் குட்டன், பேரக்குழந்தைகள் சூரஜ் (18), மிருதுளா (12) ஆகியோருடன் வசித்து வந்தார். நிலச்சரிவின் போது இவரது குடும்பம் யானையின் கருணையால் உயிர் தப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சுஜாதா கூறியதாவது: திங்கள்கிழமை இரவே தொடங்கிய மழை நள்ளிரவைத் தாண்டி செவ்வாய்க்கிழமை 4 மணிக்கு கனமழையாக மாறியது. இதையடுத்து, வீட்டை தண்ணீர் சூழ ஆரம்பித்தது. அங்கிருந்து அருகில் உள்ள குன்றுக்கு தப்பினோம். காபி மரங்களால் மூடப்பட்ட அந்த குன்றில் யானைகளும் தஞ்சமடைந்திருந்தன.

எங்களுக்கு சில அங்குல தூரத்தில்தான் யானை கூட்டம் நின்றிருந்தது. அதன் கால்களுக்கு இடையில்தான் இரவு பொழுது முழுவதையும் பயத்துடன் கழித்தோம். அந்த யானையின் கண்களைப் பார்க்கையில் எங்களின் இக்கட்டான சூழ்நிலையை அது புரிந்து கொண்டது போல் தோன்றியது. அதனால், அந்த யானை கூட்டம் ஆக்ரோஷமாகி எங்களை தாக்க முற்படவில்லை.

காலையில் மீட்புக் குழுவினர் எங்களை வந்து மீட்கும் வரை யானைகளும் எங்களின் பாதுகாப்புக்கு அரணாக அங்கேயே நின்றிருந்தன. சூரியன் உதிக்கையில் யானையின் கண்கள் துளிர்விட்டு ஆசிர்வதிப்பதை என்னால் பார்க்க முடிந்தது. இது, எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம். இவ்வாறு நிலச்சரிவிலிருந்து தப்பிய தனது அனுபவத்தை சுஜாதா பகிர்ந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE