‘நீட்’ நுழைவு தேர்வை ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இளநிலை நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இதில், வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது:

பிஹார் தலைநகர் பாட்னா, ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் ஆகிய பகுதிகளில் நீட்வினாத்தாள் கசிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சிபிஐ விசாரித்து, உச்ச நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் இதுபோன்ற முறைகேடு நடந்ததற்கு ஆதாரம் இல்லை. எனவே, நீட் தேர்வை ரத்துசெய்துவிட்டு, மறுதேர்வுக்கு உத்தரவிட அவசியம் இல்லை.

நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) தேர்வு நடைமுறைகளை ஆய்வு செய்ய இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

செப்.30-க்குள் அறிக்கை: நீட் தேர்வின் ஆன்லைன் பதிவு முறை, தேர்வு மையங்கள், வினாத்தாள், ஓஎம்ஆர் விடைத்தாள்கள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு குறித்து இந்த கமிட்டி விரிவாக ஆய்வு நடத்தி,தனது ஆய்வறிக்கையை உச்சநீதிமன்றத்தில் செப்.30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

அதன் பிறகு ஒரு மாதத்துக்குள் மத்திய கல்வி அமைச்சகம் நீட் தேர்வு தொடர்பான கொள்கையை வரையறுத்து, உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தனது செயல்பாட்டில் உள்ள குறைகளை என்டிஏ நிர்வாகம் நிவர்த்தி செய்யவேண்டும். வினாத்தாள் வைக்கப்படும்ஸ்டிராங் ரூமில் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்க கூடாது.

இந்த ஆண்டு தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கியதால், 44 பேர்முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழ கூடாது. இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE