836 இந்தியர்களுக்கு 1 மருத்துவர்: உலக சுகாதார அமைப்பின் அளவுகோலை விஞ்சியது இந்தியா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய சுகாதார துறையின் இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் மக்களவையில் கூறியதாவது. தேசிய மருத்துவ ஆணையம், கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட தரவுகளின்படி 13 லட்சத்து 86 ஆயிரத்து 136 அலோபதி மருத்துவர்கள் மாநில மருத்துவ கழகங்களிலும் தேசிய மருத்துவ ஆணையத்திலும் பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் 80 சதவீதம் பேர் மருத்துவ பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று எடுத்துக்கொண்டால் ஆயுர் வேதா, சித்தா, யோகா, இயற்கை முறை மற்றும் ஹோமியோபதி சிகிச்சைகளைக் குறிக்கும் ஆயுஷ் மருத்துவ சிகிச்சைகளை அளித்துவரும் 5 லட்சத்து 65 ஆயிரம் மருத்துவர்களும் உள்ளனர்.

ஆக மொத்தம், 836 இந்தியர்களுக்கு 1 மருத்துவர் என்கிற விகிதத்தை இந்தியா எட்டியுள்ளது. இதன் மூலம் 1000 பேருக்கு குறைந்தது 1 மருத்துவர் என்கிற உலக சுகாதார அமைப்பின் அளவுகோலை இந்தியா விஞ்சியுள்ளது. நாட்டின் 731 மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் சராசரியாக 1 லட்சத்து 12 ஆயிரத்து 112 இளநிலை மருத்துவ பட்டத்துக்கான எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்படுகின்றன.

மேலும், 19 எய்ம்ஸ் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE