வயநாட்டுக்கு நம்பிக்கை ‘பாலம்’ அமைத்த மேஜர் சீதா ஷெல்கேவும், தம்பிகளும் | HTT Explainer

By மலையரசு

மேப்பாடி: கேரளாவில் வயநாடு பகுதியில் கடந்த திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாக அடுத்தடுத்து 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மண்ணில் புதைந்தனர். இங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 330-ஐ தாண்டிவிட்டது. மீட்பு பணியில் பாதுகாப்பு படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நிலச்சரிவின் காரணமாக காரணமாக பல இடங்கள் துண்டிக்கப்பட்டது. குறிப்பாக, சூரல்மலா - முண்டக்கை பகுதியை இணைக்கும் முக்கிய பாலம் துண்டிக்கப்பட்டதால் முண்டக்கை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாறியது. அங்கு மீட்புக் குழு செல்வதிலும் சிரமங்கள் ஏற்பட்டன.

இதனையடுத்து, மீட்பு பணியை விரைந்து மேற்கொள்ள ‘பெய்லி’ எனப்படும் தற்காலிக பாலங்களை அமைக்க ராணுவத்தினர் முடிவு செய்தனர். இதற்கான உபகரணங்கள் டெல்லி மற்றும் பெங்களூருலிருந்து விமானங்கள் மூலம் கண்ணூர் விமான நிலையம் கொண்டுவரப்பட்டு, பின்னர் 17 லாரிகள் மூலம் வயநாடு கொண்டுவரப்பட்டு, தற்காலிக பாலங்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது.

பெய்லி பாலம் என்றால் என்ன? - இந்த பெய்லி பாலம் கடந்த 1940-41-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டு இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டது. இதன் பாகங்களை எளிதில் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு சென்று தற்காலிக பாலம் அமைக்க முடியும். இந்தப் பாலம் ராணுவப் பணிகளுக்கும், இயற்கை பேரிடர் ஏற்படும் இடங்களிலும் தற்போதும் பயன்படுத்தப்படுகிறது. இங்கிலாந்து பாதுகாப்பு துறையில் பணியாற்றிய டொனால்ட் பெய்லி என்பவர்தான் இந்தப் பாலத்தை உருவாக்கினார். இந்த பெய்லி பாலம் ராணுவ டாங்க்குகளின் எடையையும் தாங்கக் கூடியது.



மெட்ராஸ் சாப்பர்ஸ் அல்லது தம்பிகள்: மெட்ராஸ் சாப்பர்ஸ் என அழைக்கப்படும் ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினியரிங் படைப்பிரிவு இந்த பெய்லி பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டது. மெட்ராஸ் சாப்பர்ஸ் என்பது இந்திய ராணுவத்தின் ஒரு பொறியாளர் குழு. இந்த குழுவை தம்பிகள் குழு என்றும் அழைக்கின்றனர். இக்குழு, ஆங்கிலேய ஆட்சியின் பழைய மெட்ராஸ் பிரசிடென்சி ராணுவத்தில் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் தற்போது பெங்களூருவில் உள்ளது. 200 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது ராணுவத்தின் இந்த பிரிவு.

மெட்ராஸ் சாப்பர்ஸின் 144 பேர் கொண்ட குழு இரவு, பகலாக தற்காலிக பெய்லி பாலத்தை அமைத்து தற்போது வயநாட்டில் மீட்புப் பணியை எளிமைப்படுத்தியுள்ளது. 144 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றிருந்த பெண் மேஜர் சீதா அசோக் ஷெல்கே. மகாராஷ்டிராவின் அகமதுநகர் காதில்கான் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான சீதா ஷெல்கே தனது செயல்பாடுகளுக்காக வயநாட்டு மக்களால் தற்போது பாராட்டப்பட்டு வருகிறார்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள இவர், ராணுவத்தில் இணைய வேண்டும் என்பதை கனவாக கொண்டு அதற்கான தேர்வை எழுதி மெட்ராஸ் சாப்பர்ஸ் குழுவில் சேர்ந்தார். வயநாடு அவருக்கான முதல் பணி கிடையாது. 2015-ம் ஆண்டு ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இதேபோல் ஒரு சூழ்நிலையில் தனது முதல் பணியை மேற்கொண்டார். இதன்பின் தொடர்ச்சியாக பேரிடர் மீட்புப்பணியில் இணைந்து மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டார். இவரின் அசாத்திய பணி அனுபவம் தற்போது வயநாடு மக்களையும் மீட்க உதவிகரமாக இருந்தது.

வயநாடு மீட்புப்பணிகள் குறித்து ஊடகங்களுக்கு பேசியுள்ள மேஜர் சீதா ஷெல்கே, “பெய்லி பாலம் அமைப்பதில் பல சவால்கள் இருந்தன. எனினும் இதுபோன்ற சூழல்களை எதிர்கொள்ள நாங்கள் முறையான பயிற்சி பெற்றுள்ளோம். வயநாடு நிலச்சரிவு சேதங்களை கண்டபோதே எங்களால் ஓய்வெடுக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டோம். அதற்கேற்ப எங்கள் வீரர்கள் உத்வேகத்துடன் பணியாற்றினர்.

அனைத்து பாதகமான சூழலையும் சகித்துக்கொண்டு 48 மணிநேரம் இடைவிடாமல் பணிபுரிந்தோம். பாலத்தின் கட்டுமானத்தை விரைவில் முடித்து மக்களை மீட்பதில் தான் எங்களின் முழு கவனமும் இருந்தது. அதனை சாத்தியப்படுத்தியுள்ளோம். எங்கள் படைப்பிரிவில் ஆண்கள், பெண்கள் என்று எதுவும் இல்லை. இதுபோன்ற பெரிதா சூழ்நிலைகளை சமாளிக்க பயிற்சி பெற்ற வீரர்கள் நாங்கள். நாங்கள் எந்த சலுகைகளையும் எதிர்பார்க்க மாட்டோம்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE