வயநாடு நிலச்சரிவு உயிரிழப்பு 300-ஐ தாண்டியது: நிவாரண முகாமில் ராகுல், பிரியங்கா ஆறுதல்

By செய்திப்பிரிவு

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐதாண்டியுள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை பகுதியை ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். நிவாரண முகாம்களில் உள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெருமழை காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகளில் கடந்த 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. வீடுகள் இருந்த தடயமே தெரியாத அளவுக்கு அப்பகுதி முழுவதும் சேற்று மண்ணால் மூடப்பட்டுள்ளது.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் நேற்று 3-வது நாளாக மீட்பு பணி முழு வீச்சில் நடைபெற்றது. இங்கு தோண்ட தோண்ட உடல்கள் கிடைத்து வருகின்றன. உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது. இறந்தவர்களில் இதுவரை 100 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்று காலை வரை 256 உடல்கள் பிரேதப் பரிசோதனை முடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.

பேரிடர் பாதித்த பகுதிகளில் இருந்து 221 பேர் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 91 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், வயநாடு தொகுதி முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேராவும் நேற்று கேரளா வந்தனர்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் காலை 9.30 மணிக்கு கண்ணூர் விமான நிலையம் வந்திறங்கிய அவர்கள், பிறகு கார் மூலம் வயநாடு சென்றனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதியை இருவரும் பார்வையிட்டனர். பிறகு மேப்பாடியில் உள்ள டாக்டர் மூப்பன் மருத்துவக் கல்லூரி மற்றும் பொது சுகாதார மையத்துக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர், மேப்பாடியில் 2 நிவாரண முகாம்களுக்கு சென்று, அங்கு தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ஆலப்புழை எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறும்போது, ‘‘நிச்சயமாக இது ஒரு தேசிய பேரழிவு. ஆனால், அரசு என்ன சொல்கிறது என்று பார்ப்போம். மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும், வீடுகளையும் இழந்திருப்பது மிகவும் வேதனையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் அவர்களிடம் பேசுவதே மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. இது எனக்கு மிகவும் கடினமான நாளாக இருந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்க, நாங்கள் முழு முயற்சி செய்வோம்” என்றார்.

பிரியங்கா காந்தி கூறும்போது, “பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும், எங்களால் முடிந்த ஆதரவையும், ஆறுதலையும் வழங்கவே இங்கு வந்துள்ளோம்” என்றார்.

நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு, ராகுல் காந்தி தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளதாவது: பேரழிவு மற்றும் சோக காட்சிகளை கண்டது, இதயத்தை மிகவும் வேதனைப்படுத்தியது. இந்த கடினமான நேரத்தில் நானும், பிரியங்காவும் வயநாடு மக்களுடன் நிற்கிறோம். நிவாரணம், மீட்பு, மறுவாழ்வு பணிகளை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து, தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதிசெய்வோம். நிலச்சரிவுகள் மற்றும் இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து நிகழ்வது மிகவும் கவலை அளிக்கிறது. இந்த பிரச்சினையில் ஒரு விரிவான செயல் திட்டம் அவசரமாக தேவை’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 31-ம் தேதியே ராகுலும், பிரியங்காவும் வயநாடு செல்ல திட்டமிட்டிருந்தனர். தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்படக்கூடும் என்பதால் பயணம் ஒருநாள் தள்ளிவைக்கப் பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE