“ராகுல் தைத்த செருப்பை கோடி ரூபாய் கொடுத்தாலும் விற்கமாட்டேன்” - உ.பி. தொழிலாளி நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

ரேபரேலி: ராகுல் காந்தி தைத்த செருப்பை பலரும் அதிக விலைக்கு கேட்பதாகவும், கோடி ரூபாய் கொடுத்தால் கூட அந்த காலணிகளை விற்கமாட்டேன் என்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த காலணி தைக்கும் தொழிலாளி ராம் சைத் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த காலணி தைக்கும் ஏழை தொழிலாளி ராம் சைத். இவர் சுல்தான்பூரில் வசிக்கிறார். தனது ஏழ்மை நிலையை கூறி உதவி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு தகவல் அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித் ஷா பற்றி சர்ச்சை கருத்து கூறியது தொடர்பான அவதூறு வழக்கில், கடந்த 26-ம் தேதி சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரானார். நீதிமன்றம் செல்லும் வழியில் சுல்தான்பூரில், ஏழை தொழிலாளி ராம் சைத் வீட்டருகே காரை நிறுத்தினார்.

பின்னர் ராம் சைத் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து 30 நிமிடங்கள் உரையாடினார். அவருடன் சேர்ந்து காலனி ஒன்றையும் தைத்தார். அவருடைய நிலையை கேட்டறிந்த ராகுல், நிச்சயம் உதவி செய்வதாக உறுதியளித்து விட்டு நீதிமன்றத்துக்கு சென்றார். பின்னர் ஓரிரு தினங்களிலேயே அந்த தொழிலாளிக்கு காலணி தயாரிக்கும் இயந்திரத்தை ராகுல் காந்தி அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி தைத்த செருப்பை பலரும் அதிக விலைக்கு கேட்பதாக ராம் சைத் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “என் வீட்டுக்கு ஒரு நபர் பெரிய காரில் வந்து இறங்கி, ராகுல் தைத்த அந்த செருப்புக்கு ரூ.1 லட்சம் தருவதாக கூறினார். ஆனால் நான் மறுத்து விட்டேன்.

அதன் பிறகு நான் கடைக்குச் சென்றதும் மற்றொரு நபர் வந்து, ரூ.2 லட்சம் தருவதாக சொன்னார். அவரிடமும் முடியாது என்று சொல்லிவிட்டேன். தொடர்ந்து அந்த செருப்பை விலைக்குக் கேட்டு எனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. ஆனால் அவர்கள் யாருடைய கோரிக்கைக்கும் நான் செவிசாய்க்கவில்லை.

ஆயிரம், லட்சம் என்ன? கோடி ரூபாய் கொடுத்தால் கூட அந்த காலணிகளை நான் விற்கமாட்டேன். அவற்றை ப்ரேம் போட்டு என் வீட்டில் மாட்டி வைக்கப் போகிறேன்” இவ்வாறு ராம் சைத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE