2-ம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது போல் தற்காலிக பாலங்கள் அமைத்து ராணுவம் மீட்பு பணி

By செய்திப்பிரிவு

வயநாடு: வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ‘பெய்லி’ எனப்படும் தற்காலிக பாலங்களை அமைத்து மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் வயநாடு பகுதியில் கடந்த திங்கள் கிழமை பெய்த கனமழை காரணமாக அடுத்தடுத்து 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மண்ணில் புதைந்தனர். இங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 200-ஐ நெருங்குகிறது. மீட்பு பணியில் பாதுகாப்பு படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வெள்ளம் காரணமாக பல இடங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் ரோப் மூலமாக பலர் மீட்கப்பட்டனர். மீட்பு பணியை விரைந்து மேற்கொள்ள, ‘பெய்லி’ எனப்படும் தற்காலிக பாலங்களை அமைக்க ராணுவத்தினர் முடிவுசெய்தனர். இதற்கான உபகரணங்கள் டெல்லி மற்றும் பெங்களூரிலிருந்து விமானங்கள் மூலம் வயநாடு கொண்டுவரப்பட்டு, தற்காலிக பாலங்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.

இது குறித்து கேரள அமைச்சர் ராஜன் அளித்த பேட்டியில், ‘‘ ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினியரிங் படைப்பிரிவு பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மீட்பு பணிக்கு ஜேசிபி இயந்திரங்களை கொண்டு செல்ல வேண்டும். அதற்கு ராணுவத்தின் தற்காலிக பாலம் மிக முக்கியமானது. பாலத்தின் பாகங்கள் விமானம் மற்றும் சாலை மார்க்கமாக வயநாடு கொண்டுவரப்பட்டுள்ளன. ராணுவத்தினர் 5 மணி நேரத்துக்குள் இந்த பாலத்தை அமைத்துவிடுவர்’’ என்றார்.

இந்த பெய்லி பாலம் கடந்த 1940-41-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டு இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டது. இதன் பாகங்களை எளிதில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு சென்று தற்காலிக பாலம் அமைக்க முடியும். இந்தப் பாலம் ராணுவப் பணிகளுக்கும், இயற்கை பேரிடர் ஏற்படும் இடங்களிலும் தற்போதும் பயன்படுத்தப்படுகிறது.

இங்கிலாந்து பாதுகாப்பு துறையில் பணியாற்றிய டொனால்ட் பெய்லி என்பவர்தான் இந்தப் பாலத்தை உருவாக்கினார். இந்த பெய்லி பாலம் ராணுவ டாங்க்குகளின் எடையையும் தாங்கக் கூடியது.

இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட இங்கிலாந்தின் மறைந்த ஃபீல்ட் மார்ஷல் பெர்னார்ட் மான்ட்கோமெர்ரி ஒருமுறை கூறுகையில், ‘‘பெய்லி பாலங்கள் இல்லாமல் நாம் போரில் வென்றிருக்க முடியாது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE