பூஜா கேத்கரின் ஐஏஎஸ் தேர்வு வெற்றியை ரத்து செய்தது யுபிஎஸ்சி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பூஜா கேத்கர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றதை ரத்து செய்துள்ள மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), வரும் காலங்களில் தேர்வு எழுதுவதற்கும் தடை விதித்துள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதியதில் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதை அடுத்து, பூஜா கேத்கரின் தேர்வு வெற்றி ரத்து செய்யப்படுவதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்திலும் அவர் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுத தடை விதிப்பதாகவும் அறிவித்தள்ளது. 2022-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர், சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அடுத்து அவரது பின்னணி குறித்து மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆய்வு மேற்கொண்டது.

"2009 முதல் 2023 வரையிலான 15 ஆண்டுகளில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியவர்களின் தரவுகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. இந்த விரிவான ஆய்வுக்குப் பிறகு, பூஜா மனோரமா திலீப் கேத்கர் தவிர, வேறு யாரும் சிவில் சர்வீஸ் தேர்வு விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்டதை விட அதிக முறை தேர்வுகளை எழுதியதாக கண்டறியப்படவில்லை. பூஜா கேத்கர் தனது பெயரை மட்டுமல்லாமல், தனது பெற்றோரின் பெயரையும் பலமுறை மாற்றி தேர்வு எழுதி இருக்கிறார்.

இதன் காரணமாக அவர் எத்தனை முறை சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினார் என்ற எண்ணிக்கையைக் கண்டறிய முடியவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் மத்திய பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டுள்ளது” என்று மத்திய பணியாளர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE