சித்தராமையா, டி.கே.சிவகுமாரிடம் காங். மேலிடம் ‘விசாரணை’ - கர்நாடக அமைச்சரவையில் மாற்றமா?

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அடுத்தடுத்து புகார்கள் வெளியாவதால், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகிய இருவ‌ரையும் டெல்லிக்கு அவசரமாக அழைத்து விசாரணை நடத்தியுள்ளது அக்கட்சியின் மேலிடம்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கடந்த இரு மாதங்களில் பெட்ரோல், பால், சொத்து வரி மற்றும் பேருந்து கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், எதிர்கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இதேபோல எஸ்.சி, எஸ்.டி சிறப்பு உட்கூறு நிதியை, அரசின் இலவச திட்டங்களுக்கு பயன்படுத்தியதற்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே வால்மீகி பழங்குடியினர் ஆணையத்தில் ரூ.187 கோடி முறைகேடு நடந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பழங்குடியினர் நலத்துறையின் அமைச்சராக இருந்த நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், நாகேந்திராவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூருவில் மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரம் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள பாஜக, மஜத ஆகிய கட்சிகள், சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோரி வருகின்றனர். கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செவ்வாய்க்கிழமை சித்தராமையாவையும், டி.கே.சிவகுமாரையும் உடனடியாக டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, இருவரும் நேற்று பிற்பகலில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, வேணுகோபால் ஆகியோர் இருவரிடமும் ஊழல் புகார் குறித்து விசாரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தின் காரணமாக சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், அமைச்சரவையை மாற்றம் செய்யவும் மேலிடம் முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE