வயநாடு நிலச்சரிவு: இதுவரை 270 உடல்கள் மீட்பு; உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சம்

By செய்திப்பிரிவு

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களில் இதுவரை 270 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்பு பணியில் ராணுவம், போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக, புதன்கிழமை காலை முதல் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை மற்றும் சூரல்மலா பகுதிகளில் இருந்து 270 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 200 பேர் மாயமாகி உள்ளதாக தெரிகிறது. இதனை அரசு தரப்பு அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 89 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் 32 பேரின் உடல்கள் அவர்களது உறவுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் இதுவரை 143 பேரின் உடல்களுக்கு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பலர் மண்ணுக்குள் புதைந்து இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு மேப்பாடி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், அந்தப் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என தெரிவித்துள்ளது. எர்ணாகுளம், திருச்சூர், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை மாலை 6 மணி வரையிலான செய்தித் தொகுப்பு: “குற்றம்சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல. அமித் ஷாவின் கருத்துகளை நான் விரோதமாக எடுத்துக்கொள்ளவில்லை" என்று வயநாடு நிலச்சரிவு தொடர்பான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் கூறியுள்ளார். | வாசிக்க > “இது குற்றம்சாட்டும் நேரம் அல்ல!” - அமித் ஷாவுக்கு பினராயி விஜயன் பதில்

முண்டக்கை பகுதியில் சிக்கிக் கொண்டு இரண்டு தங்கும் விடுதிகளில் தஞ்சம் புகுந்திருந்த 19 பேர் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சாலியாற்றில் 24 சடலங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டன. முண்டக்கை பகுதியில் இன்று 10 உடல்கள் மீட்கப்பட்டன. 91 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரள வரலாற்றில் மிக மோசமான நிலச்சரிவு இதுவென்பதால் நேற்றும், இன்றும் கேரள அரசு துக்கம் அனுசரிக்கிறது. திருவனந்தபுரத்தில் உள்ள சட்டப்பேரவையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனும், ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஆகியோர் வயநாட்டுக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை கண்காணிக்கவுள்ளனர்.

மீட்புப்பணிகள்: மொத்தம் 1,592 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வயநாடு மாவட்டத்தில் மட்டும் 82 நிவாரண முகாம்களில் 2,017 பேர் தங்கியுள்ளனர். மேப்பாடியில் உள்ள எட்டு முகாம்களில் 421 குடும்பங்களைச் சேர்ந்த 1,486 பேர் தங்கியுள்ளனர். முண்டக்கை, அட்டமலை மற்றும் சூரல்மலா பகுதிகளில் மீட்புப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இன்று கூடுதலாக 132 ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்காக இரண்டு ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 96569 38689, 80860 10833 ஆகிய தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் பொது மக்கள் உதவிக்காக அறிவித்துள்ளது.

சூரல்மலாவில் ஒரு நேரத்தில் ஒருவர் செல்லும் வகையில் தற்காலிக பாலம் ஒன்றை ராணுவம் அமைத்து மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மீண்டும் கனமழையால் மீட்புப்பணிகளில் தொய்வு: நிலச்சரிவால் கடுமையாக பாதித்த முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால், இருவழிஞ்சி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால், அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த ஆற்றில் சூரல்மலை - முண்டக்கை பகுதியை இணைக்கும் வகையில் இரும்பு பாலம் அமைக்கும் பணி தடைபட்டது.

தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் அறிவித்த ரூ.5 கோடி நிவாரண நிதிக்கான காசோலையை கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயனை சந்தித்து அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்: வயநாடு நிலச்சரிவு தொடர்பாக விவாதிக்க, நாளை கேரள அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாளை காலை 11.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா கூற்றை மறுத்த கேரள முதல்வர்: வயநாடு நிலச்சரிவு தொடர்பாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கையை மத்திய அரசு கடந்த 23-ம் தேதியே வழங்கியது. ஜூலை 26-ம் தேதி அனுப்பப்பட்ட செய்தியில், 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என்றும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும், சேறும் சகதியுமாக மழைநீர் வரலாம் என்றும், அதில் புதைந்து மக்கள் உயிரிழக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. முன்னரே எச்சரிக்கையைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் 9 பட்டாலியன்கள் நிறுத்தப்பட்டன. எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொண்டிருந்தால், நிலைமை இவ்வளவு மோசமாகியிருக்காது." என்றார்.

ஆனால், இதனை மறுத்த கேரள முதல்வர் பினராயி விஜயன், "மத்திய அரசின் எந்த அமைப்புகளும் அத்தகைய எச்சரிக்கையை கொடுக்கவில்லை" என்றார்.

முண்டக்கையை அடைந்த ராணுவம்: இதற்கிடையில் தற்காலிக மரப்பாலம் அமைத்து ராணுவ மீட்புக் குழு முண்டக்கையை அடைந்துள்ளது. அங்கிருந்து மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். 4 குழுக்களாகப் பிரிந்து 150 ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 185 பேர் உயிரிழந்துள்ளனர். அவற்றில் 143 உடல்களின் பிரேதப் பரிசோதனை நிறைவடைந்துள்ளது. 190 பேர் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். '91 பேரது நிலை தெரியவில்லை' என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தனியார் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் பேசிய கேரள அமைச்சர் ராஜன்,“நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை” என்றார். நிலச்சரிவு ஏற்பட்ட காபி தோட்டங்களில் மேற்குவங்கம், அசாமைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிறைய பேர் பணி புரிந்துவந்துள்ளனர். அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.

விபத்தில் சிக்கிய அமைச்சர்: இந்நிலையில், வயநாட்டில் நடைபெறும் மீட்புப் பணிகளைப் பார்வையிடுவதற்காக சென்ற சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜின் கார் மலப்புரம் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அவருக்கு மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக உள்ளூர் காவல் துறை தெரிவித்துள்ளது.

மழை, நிலச்சரிவு எச்சரிக்கையால் அச்சம்: இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களில் இன்றும் (ஜூலை 31) கனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை (‘ரெட் அலர்ட்’) விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மீண்டும் நிலச்சரிவு அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நடந்தது என்ன? கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கொட்டி வருகிறது.

பலத்த மழை காரணமாக, கேரளாவின் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மலையை ஒட்டிய பகுதிகளில் வெள்ளநீர் பாய்ந்ததால் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கிருந்த வீடுகளை மூடியது. டன் கணக்கிலான மண் சேறும் சகதியுமாக மூடியதில், அந்த வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.

நாட்டையே அதிர்ச்சியில் உறையவைத்த இயற்கை பேரிடர் பாதிப்பை அடுத்து, 2வது நாளாக இன்றும் (புதன்கிழமை) மீட்புப் பணிகளில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மீட்புப் பணிகளில் ஈடுபட கேரளாவில் இருந்து ஏராளமான தன்னார்வலர்கள் வந்தாலும் கூட நிபுணத்துவம், அனுபவம் நிறைந்தவர்கள் மட்டுமே மீட்புப் பணியில் அனுமதிக்கப்படுவதாக தேசிய பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது. ராணுவம் சார்பில் வயநாட்டை எளிதில் அடைய தற்காலிக பெய்லி பாலம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்