வயநாடு நிலச்சரிவு: ஆற்றில் மிதந்த சடலங்கள்; சில இடங்களில் மீட்பு பணிகளில் சிக்கல்

By செய்திப்பிரிவு

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில், இந்தப் பேரழிவு தொடர்பான சில தகவல்கள்...

2 நாள் துக்கம் அனுசரிப்பு: வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் அதிகமான பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து 2 நாள் துக்கம் (ஜூலை 30, 31) அனுசரிப்பதாக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்துக்கான அதிகன மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கனமழை காரணமாக திருச்சூர், வயநாடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு ஜூலை 31-ம் தேதி (இன்று) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பாறையை பிடித்து தப்பிக்க நினைத்தவர்... வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது சிக்கிய நபர் ஒருவர் பாறையைப் பிடித்துக் கொண்டு தப்பிக்க நினைத்தார். ஆனால் வெள்ளத்தின் சீற்றத்தால் அவர் அடித்துச் செல்லப்பட்டார். அவர் முண்டக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

நிலச்சரிவில் சிக்கியபோது அவர் அங்கிருந்த பாறையை உறுதியாகப் பிடித்துக் கொண்டு நின்றார். தன்னைக் காப்பாற்றுமாறும் கரையில் இருந்தவர்களிடம் கோரிக்கை விடுத்தார். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு நடுவில் அந்தப் பாறை இருந்தது. இதையடுத்து அவரைக் காப்பாற்ற மீட்புப் படையினர் முயன்றனர். ஆனால் அதற்குள்ளாக வெள்ள நீர் அவரை அடித்துச் சென்றுவிட்டது.

ஆற்றில் மிதந்த சடலங்கள்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள சாளியார் ஆற்றில் பல சடலங்கள் அடித்து வரப்பட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. மழை வெள்ளத்தில் ஏராளமான கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ கேரளா முழுவதும் வைரலாகி வருகிறது.

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இந்த திடீர் மழை, வெள்ளத்தால் பல முக்கிய சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன.

வயநாடு மாவட்டம், சூரல்மலா பகுதியில் நிலச்சரிவில் சிக்கி இறந்த ஒருவரின் உடல்
நேற்று மீட்கப்பட்டு ரோப் ஸ்ட்ரெச்சர் மூலம் கொண்டுவரப்பட்டது.

உடல்களை மீட்பதில் சிக்கல்: அடைமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை, சூரல்மலை இடங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மண்ணில் புதையுண்ட உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏராளமான அடைமழை, வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர். அந்த உடல்களை மீட்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் ஆற்றைக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

வயநாட்டில் மீட்புப் பணி மேற்கொள்வதற்காக கேரளாவில் கண்ணூரில்
இருந்து ராணுவ வீரர்கள் நேற்று வாகனத்தில் புறப்பட்டனர்.

உதவி எண்கள் அறிவிப்பு: வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய சுகாதார இயக்கம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு தொடர்பாக 9656938689 மற்றும் 8086010833 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றிப் பார்க்க வரவேண்டாம்: கேரள காவல் துறை வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “வயநாட்டு மாவட்டத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் துயர சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களை சுற்றிப் பார்க்க யாரும் செல்லவேண்டாம். இது அங்கு நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை பாதிக்கும். ஏதேனும் உதவிக்கு 112 என்ற எண்ணில் அழைக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: கேரளாவை சேர்ந்த பல்வேறு கட்சி எம்.பி.க்கள் கூறியதாவது: வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் 500 குடும்பங்கள் தவித்து வருகின்றன. இந்த மோசமான நிலைமையை மத்திய அரசு உணர வேண்டும். கேரள அரசிடம் போதிய நிதி இல்லை.

இந்த விஷயத்தில் மத்திய அரசு எங்களுக்கு உதவ வேண்டும். நாங்கள் மத்திய அரசுக்கு வரி செலுத்துகிறோம். துயரமான நேரத்தில் எங்களுக்கு உதவுங்கள். உடனடியாக நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும். நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக உடனே ரூ.5 ஆயிரம் கோடியை நிவாரண நிதியாக ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்