வயநாடு நிலச்சரிவு - ‘மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய மோப்ப நாய்கள்’

By செய்திப்பிரிவு

வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு இதுவரை இல்லாத பேரழிவுகளில் ஒன்றாகும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பினராயி விஜயன் கூறியதாவது: இந்த சம்பவம் கேரளத்தில் இதுவரை இல்லாத பேரழிவாகும். வயநாடு, கோழிக்கோட்டில் இருந்து நிலச்சரிவு ஏற்பட்டப் பகுதிக்கு தடயவியல் நிபுணர்கள் சென்றுள்ளனர்.

மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கோழிக்கோடு, கண்ணூர், திருச்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மண்ணில் புதைந்தும் எரிந்தும் 6 டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்துள்ளன. இதனால், 350 வீடுகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

வயநாட்டில் கடந்த 48 மணி நேரத்தில் 57 செ.மீ அளவுக்கு மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் சூழ்நிலையை உணர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியது அவசியம். திருவனந்தபுரம், கோழிக்கோட்டில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை, பேரிடர் மீட்புப் படை இணைந்து பணியாற்றி வருகின்றன. வயநாட்டில் மட்டும் 45 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 118 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 5,531 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரூ.2 லட்சம் அறிவித்தார் பிரதமர்: கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் எதிர்பாராதது. கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு பணிகள் குறித்து பேசினேன்.

கேரளாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. மீட்புப் பணிகளுக்கு மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும். மேலும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி கோரிக்கை: கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வழங்கப்படுவதாக அறிவித்த நிதித் தொகையை உயர்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், வயநாடு தொகுதி முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: வயநாடு நிலச்சரிவில் சிக்கி தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மீட்பு பணிகளில் நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேரளாவை ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த பணியாளர்களை கேட்டுக் கொள்கிறேன். இதுதொடர்பாக முதல்வர் பினராயி விஜயனிடமும் தொலைபேசியில் பேசினேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE