வேலைவாய்ப்பு ஊக்கத் தொகை திட்டத்தால் நிறுவனம், இளைஞர்கள் பயனடைவார்கள்: மத்திய நிதித் துறை செயலர் நம்பிக்கை

By ஜி.பாலசந்தர்

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில்,குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நடுத்தரவகுப்பினரின் நலனில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாககுறிப்பிட்டார். மேலும், கல்வி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு, திறன்பயிற்சிக்கு பட்ஜெட்டில் ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கப்பட் டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் பட்ஜெட்டுக்கு பிந்தைய ஆலோசனை நிகழ்ச்சிக்கு 'பிஸினஸ்லைன்' நாளிதழ் ஏற்பாடு செய்திருந்தது. இதில், மத்திய நிதி துறை செயலர் டி.வி.சோமநாதன் கலந்து கொண்டார். அவரிடம் பிஸினஸ்லைன் ஆசிரியர் ரகுவீர் ஸ்ரீனிவாசன் பட்ஜெட்தொடர்பாக விரிவாக உரையாடினார். அப்போது சோமநாதன் கூறியதாவது:

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டம் புதியவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களின் செலவை குறைப்பதை நோக்கமாகக் கொண்டது. புதிய பணியாளர்கள் பயிற்சி காலத்தின்போது குறைந்த உற்பத்தி திறன் செலவுகளை ஈடுசெய்வதற்கு இந்த ஊக்கத்தொகை பெரிதும் உதவும். முதல் மாத சம்பளத்தை (ரூ.15,000 வரை) அரசாங்கம் கொடுப்பதால் நிறுவனங்கள் தயக்கமின்றி தகுதி யான இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும்.

மேலும், புதிய ஆட்சேர்ப்புக் கான பயிற்சி செலவை சமாளிக்க இந்த மானியம் நிறுவனங்களுக்கும் உதவும். புதிய பணியாளருக்கு முதல் மாதச் சம்பளம்வழங்குவது அதிக வேலைவாய்ப்பை உருவாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

ஒரு நிறுவனம் குறைந்தபட்சம் 50 பேரை சேர்த்துக் கொண்டாலோ அல்லது 25 சதவீதம் தனது பணியாளர்களை அதிகரித்தாலோ நான்கு ஆண்டுகளில் ஊதியச் செலவில் 72 சதவீதத்தை அராசாங்கம் ஈடு செய்யும். இந்த பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்தும் நிறுவனங்களிடம் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைக்கு பிறகே இறுதி செய்யப்பட்டது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் சுமார் 2.1 கோடி இளைஞர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதற்காக, ரூ.23,000 கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் திறன் தொடர்பான திட்டங்களுக்கான மொத்த ஒதுக்கீடு ஐந்து ஆண்டு காலத்துக்கு சுமார் ரூ.2 லட்சம் கோடியாக இருக்கும். இவ்வாறு சோமநாதன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE