ஸ்ரீசைலம் அணையிலிருந்து 1.35 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு

By என்.மகேஷ்குமார்


ஸ்ரீசைலம்: ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் மற்றும் பிரகாசம், நெல்லூர், கோதாவரி மாவட்டங்களில் அதிக மழை பதிவாகி வருகிறது. சாகர், ஸ்ரீசைலம் அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. இதனால் அணைகளில் இருந்து உபரி நீரை அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர்.

ஸ்ரீசைலம் அணையின் கொள்ளளவு 885 அடிகளாகும். தற்போது 882.7 அடி தண்ணீர் உள்ளதால், திங்கள்கிழமை இதன் 3 மதகுகள் 10 அடி உயரம் வரை திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று காலையில் மேலும் 2 மதகுகள் திறக்கப்பட்டு, மொத்தம் 5 மதகுகள் மூலம் 1.35 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அணையின் தாழ்வான பகுதி கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கோதாவரி நதியிலும் கடந்த 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தாளேஸ்வரம் அணையில் 13.7 அடி வரை தண்ணீர் நிரம்பியது. இதனால் தற்போது 12.95 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பலத்த மழையால் கோதாவரி மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர்நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வாழை, பப்பாளி, பூக்கள், காய்கறிகள், வெற்றிலை உள்ளிட்ட பயிர்களும் சேதம் அடைந்துள்ளன. கோனசீமா மாவட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE