‘லவ் ஜிகாத்’ வழக்கில் ஆயுள் தண்டனை: உத்தர பிரதேச சட்டப்பேரவையில் புதிய மசோதா தாக்கல்

By செய்திப்பிரிவு

லக்னோ: லவ் ஜிகாத் வழக்கில் அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டவிரோத மதமாற்ற தடை சட்ட (திருத்த) மசோதா உத்தர பிரதேச சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

உத்தரபிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்ற தடை சட்டம் கடந்த 2021-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதன்படி, கட்டாயப்படுத்தியோ, முறைகேடு செய்தோ, பொய் வாக்குறுதி அளித்தோ ஒருவரை மதமாற்றம் செய்வது குற்றம்.

குறிப்பாக ஒருவர் தனது மத அடையாளத்தை மறைத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகு, அவரை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது குற்றம் ஆகும். இது லவ் ஜிகாத் என அழைக்கப்படுகிறது.

இதுபோன்ற திருமணத்தை குடும்பநல நீதிமன்றம் ரத்து செய்ய முடியும். மேலும் சம்பந்தப்பட்டவருக்கு ஓராண்டு முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது.

இந்நிலையில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி.அரசு, சட்டவிரோத மதமாற்ற தடைசட்ட (திருத்த) மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. இதன்படி கட்டாய மதமாற்றம் செய்வோருக்கான தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது. அத்துடன் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் இது வகை செய்கிறது.

இதுகுறித்து உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த சட்டமசோதா வரவேற்கத்தக்கது. கட்டாய மதமாற்றத்தை இது தடுக்கும்” என்றார்.

பாஜக மூத்த தலைவர் மோசின் ரஸா கூறும்போது, “சிலர் தங்களுடைய மத அடையாளத்தை மறைத்து இளம்பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர். பின்னர் அந்தப் பெண்ணை தங்கள் மதத்துக்கு மாற கட்டாயப்படுத்துகின்றனர். இதுபோன்ற லவ் ஜிகாத் வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்க புதிய சட்ட மசோதா வழிவகுக்கும்” என்றார்.

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் பக்ருல் ஹசன் சந்த் கூறும்போது, “உ.பி.யில் லவ் ஜிகாத்தை தடுக்க ஏற்கெனவே ஒரு சட்டம் அமலில் உள்ளது. அப்படியிருக்கும்போது புதிய சட்டம் தேவையில்லை. போட்டித் தேர்வு வினாத்தாள் கசிவு, வேலையின்மை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து எதிர்மறை அரசியலில் பாஜக அரசு ஈடுபடுகிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE