“எங்கே போவது, எங்கே தேடுவது?” - வயநாடு உள்ளூர் மருத்துவமனையில் அவலக் குரல்கள்

By செய்திப்பிரிவு

வயநாடு: கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளால் கேரள மாநிலம் வயநாட்டில் இதுவரை 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சம்பவ இடங்களில் காணக் கிடைக்கும் காட்சிகள் மனதைப் பிழிவதாக உள்ளன.

வயநாட்டின் மேப்பாடி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணாக 45-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே சிகிச்சைப் பெறக்கூடிய சிறிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரிசையாக கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் உடல்களுக்கு மத்தியில் அழுது வீங்கிய கண்களுடன் தங்களின் அன்புக்குரியவர்களை உறவினர்கள் தேடும் காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. காயங்களுடன், குளிரில் விரைத்து கிடக்கும் உறவினர்களின் உடல்களைப் பார்த்து சிலர் மனமுடைந்து செய்வதறியாது நிற்கின்றனர். இன்னும் சிலர் அந்த உடல்களில் தங்களின் உறவினர்கள் யாரும் இல்லை என்பதை கண்டு நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.

நிலச்சரிவில் காணாமல் போன இரண்டு குழந்தைகள் உட்பட தனது குடும்பத்தினரை கலங்கியபடி தேடிக்கொண்டிருக்கிறார் இளம்பெண் ஒருவர். யாரோ ஒருவரால் காப்பாற்றப்பட்ட அப்பெண் தனது குடும்பத்தினர் இங்கு அனுமதிக்கப்பட்டிருக்காலம் என்ற நம்பிக்கையில் அவர்களைத் தேடி வந்ததாக தெரிவித்தார். அவர் கூறுகையில், "எங்கே போவது, எங்கே தேடுவது என்று தெரியவில்லை. எனது குழந்தைகளையும் காணவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்கிறார்.

இதனிடையே, இறந்தவர்களின் உடல்களுக்கிடையில் தனது சகோதரரின் உடல் இருப்பதைக் கண்டு, அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருந்தார் ஒருவர். அதேபோல் 12 வயது பெண் குழந்தை உட்பட தனக்குத் தெரிந்தவர்களின் குடும்பத்தினரை தேடுகிறார் உள்ளூர் அங்கன்வாடி ஊழியர் ஒருவர். "அவர்களின் உறவினர் ஒருவர் காலையில் என்னை அழைத்து அவர்களின் வீடு முற்றிலும் அழிந்துவிட்டது. ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் காணவில்லை என்றார். துரதிருஷ்டவசமாக அவர்கள் யாரையும் இங்கே இதுவரை நான் பார்க்கவில்லை" என்றார் அந்த ஊழியர்.

மாற்றுத்திறனாளியான அபூபக்கர் தனது சகோதரன் மற்றும் குடும்பத்தினரை மருத்துவமனைகளில் அறைகளில் தேடி அழைந்தது சோகத்தை ஏற்படுத்தியது. “கனமழை தொடர்ந்த நிலையில், நான், எனது மனைவி, மகன் ஆகியோர் எனது சகோதரியின் வீட்டுக்கு மாற்றப்பட்டோம். எனது சகோதரன் குடும்பத்துடன் அங்கேயே தங்கியிருந்தான். இப்போது அவர்களைக் காணவில்லை" என்றார் அபூபக்கர் சோகத்துடன் "யாராவது ஒருவர் அவர்களைக் காப்பாற்றியிருக்கலாம். அவர்கள் எங்காவது பாதுகாப்பாக இருக்கலாம்" என்று நம்பிக்கை தெரிவித்தார். உள்ளூர் மக்களைத் தவிர போலீஸார், சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட பலர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE