மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: குடியரசு தலைவருக்கு காங்கிரஸ் தலைவர் கடிதம்

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்க காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு எழுதியுள்ள 2 பக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மேற்கு வங்க மாநிலத்தில் அராஜகம் நடக்கிறது. பொதுமக்களை பாதுகாக்கவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களவை தேர்தலின்போது மாநிலத்தில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் மீதுதாக்குதல் நடந்தது. எதிர்க்கட்சி களைச் சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள் மீதுஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து தாக்குதல்நடத்துகின்றனர். இதில் அப்பாவிகள் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற அராஜக செயல்களைப் பார்க்கும்போது தனிப்பட்ட முறையில் எனக்கு கோபம்வருகிறது. ஆளும் கட்சியுடன் தொடர்பில்லாத பலர் வேலைகளை இழந்துள்ளனர். இதனால் பலருடைய வாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ளது.

மேலும், சந்தேஷ்காலியில் நடந்த பாலியல் கொடுமைகளை பலரும் அறிவார்கள். முர்ஷிதாபாத்மாவட்டத்தில் மக்களவை தேர்தலுக்கு முன்பு வன்முறை நடைபெற்றது. இதுபோன்ற சம்பவங்கள்எல்லாம் வாக்காளர்களை மிரட்டவே நடைபெற்றதாக தெரிகிறது.

எதிர்க்கட்சியினர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. தேர்தல் முடிந்த பிறகும் அந்த வன்முறைகள் தொடர்ந்தன. ஜல்பைகுரி பகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டார். மேற்கு வங்க மாநிலத்தில் எதிர்க்கட்சிகளே இருக்க கூடாது என்பதற்காக இதுபோன்ற வன்முறைகள் நடைபெறுவதாக கருதுகிறேன். அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலை போல் மாநிலத்தில் சூழ்நிலைஉள்ளது. எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் தலையிட்டு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்.

இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE