வெளிநாடுகளில் 5 ஆண்டுகளில் 633 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு: மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளில், 633 இந்திய மாணவர்கள் விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொத்தம் 41 நாடுகளில் மாணவர்களின் இறப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதிகபட்சமாக கனடாவில் 172 இந்திய மாணவர்களும், அமெரிக்காவில் 108 மாணவர்களும் உயிரிழந்தனர். இதுதவிர, தாக்குதல்களில் 19 இந்திய மாணவர்கள் கொல்லப்பட்டனர் என்றும், இதில் அதிகபட்சமாக கனடாவில் 9 பேர், அமெரிக்காவில் 6 பேர் கொல்லப்பட்டனர் என்றும் வெளியுறவு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மக்களவையில் காங்கிரஸ் எம்.பி கொடிக்குன்னில் சுரேஷ் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவு அமைச்சகம் இந்த தரவுகளை வழங்கியுள்ளது. வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் இது தொடர்பாக மக்களவையில் கூறுகையில், "இந்திய மாணவர்கள் விபத்துக்கள், மருத்துவ சிகிச்சை போன்ற பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் இறந்துள்ளனர். கனடா மற்றும் அமெரிக்காவில் அதிகபட்ச மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இதற்கடுத்து, இங்கிலாந்தில் 58 மாணவர்கள், ஆஸ்திரேலியா 57 மாணவர்கள், ரஷ்யா 37 மாணவர்கள் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதற்கிடையே, கடந்த மூன்று ஆண்டுகளில் 48 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடுகடத்தலுக்கான காரணங்கள், அமெரிக்க அதிகாரிகளால் அதிகாரப்பூர்வமாக இதுவரை வழங்கப்படவில்லை" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE