“மோடி ஆட்சியில் மகாபாரத ‘வியூகம்’, வரி பயங்கரவாதம்...” - மக்களவையில் ராகுல் காந்தி கொந்தளிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “பிரதமர் மோடி தனது சட்டையில் அணிந்திருக்கும் தாமரை சின்னத்தால் குறிப்பிடப்படும் 'சக்கர வியூகத்தில்' இந்தியா சிக்கியுள்ளது. மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் அபிமன்யூ மாட்டிக் கொண்டதைப் போல, இந்தியாவும் மோடி ஆட்சியில் சிக்கிக் கொண்டுள்ளது” என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் எம்பியும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று மக்களவையில் பேசினார். ராகுல் காந்தி தனது பேச்சில், "இந்தியாவில் அச்சம் நிறைந்த சூழல் நிலவுகிறது. அந்த அச்சம் நம் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பரவியுள்ளது. பாஜகவில் ஒரு நபர் மட்டுமே பிரதமர் கனவு காண அனுமதி கிடைக்கிறது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமராக விரும்பினால் அவர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவரும் அச்சத்தில் உள்ளனர். என்னுடைய ஒரே கேள்வி, இந்தியாவில் ஏன் இந்த அச்சம் ஆழமாக பரவியுள்ளது என்பதுதான். எனது பேச்சைக் கேட்டு பாஜகவினர் சிரித்தாலும் அவர்கள் உள்ளுக்குள் ஒருவித அச்சத்தில்தான் உள்ளனர்.

பிரதமர் மோடி தனது சட்டையில் அணிந்திருக்கும் தாமரை சின்னத்தால் குறிப்பிடப்படும் 'சக்கர வியூகத்தில்' இந்தியா சிக்கியுள்ளது. மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் அபிமன்யூ மாட்டிக் கொண்டதைப் போல, இந்தியாவும் மோடி ஆட்சியில் சிக்கிக்கொண்டுள்ளது. இந்தியாவை கைப்பற்றிய பாஜகவின் சக்கர வியூகத்துக்கு பின்னால் 3 படைகள் உள்ளன. அவை, இந்தியாவின் வளங்கள் அனைத்தையும் சொந்தம் கொண்டாடும் இருவர், சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற மத்திய அரசின் ஏஜென்சிகள், அரசியல் அதிகார ஆசை. இந்த மூன்றும் சேர்ந்து இந்தியாவை சீரழித்துவிட்டன. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் இந்த சக்கர வியூகத்தின் சக்தியை பலவீனப்படுத்தும் என்பது எனது கணிப்பு.

மத்திய பட்ஜெட் இந்த நாட்டின் விவசாயிகளுக்கு, இளைஞர்களுக்கு, தொழிலாளர்கள், சிறு வணிகர்களுக்கு உதவும் என்று சொல்லப்பட்டது. ஆனால், எனது பார்வையில் இந்த பட்ஜெட்டின் ஒரே நோக்கம் ஏகபோகமாக வணிகம் செய்ய நினைப்பவர்களின் கட்டமைப்பையும், ஜனநாயகத்தை அழிக்கும் அரசு ஏஜென்சிகளின் கட்டமைப்பையும் வலுப்படுத்துவது ஆகும். ஏனென்றால், சிறு வணிகங்களை கடுமையாக பாதித்துள்ள வரி பயங்கரவாதம் குறித்து பட்ஜெட்டில் எதுவும் இல்லை. ஜிஎஸ்டி என்பது வரிவிதிப்பு பயங்கரவாதம். ஜிஎஸ்டி மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அழிகின்றன. ஜிஎஸ்டி மூலம் வரி பயங்கரவாதத்தை ஏவியுள்ளது மத்திய அரசு.

அக்னி பாதை திட்டத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க பட்ஜெட்டில் எந்த நிதி ஒதுக்கீடும் இல்லை. இளைஞர்களைப் பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினை வினாத்தாள் கசிவு. ஆனால் பட்ஜெட்டில் அது தொடர்பாக எதையும் நிதியமைச்சர் குறிப்பிடவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் 70 வினாத்தாள் கசிவு சம்பவங்கள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பட்ஜெட்டில் எந்த வார்த்தையும் இடம்பெறவில்லை. மோடி அரசு என்பது வேலைவாய்ப்பின்மை மற்றும் வினாத்தாள் கசிவின் அர்த்தமாக மாறிவிட்டது. மத்திய பட்ஜெட்டில் கடந்த 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கல்விக்கு குறைந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ உத்தரவாதம் எதுவும் இல்லை. என்டிஏ அரசு செய்யாததை நாங்கள் செய்வோம் என்று விவசாயிகளுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். இதே அவையில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ உத்தரவாத மசோதாவை நிறைவேற்றுவோம். இந்த பட்ஜெட்டுக்கு முன், நடுத்தர வர்க்கத்தினர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருந்தனர். இப்போது இந்த பட்ஜெட் மூலம் அதே நடுத்தர வர்க்கத்தை முதுகிலும் நெஞ்சிலும் பாஜக அரசு குத்திவிட்டது.

இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் வணிகங்களை இரண்டு பேர் மட்டுமே கட்டுப்படுத்துகிறார்கள். விமான நிலையங்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள், துறைமுகங்கள் என அனைத்தையும் அவர்களே வைத்துள்ளனர். அடுத்ததாக அவர்கள் ரயில்வேயிலும் கால்பதிக்க உள்ளனர். இந்தியாவின் செல்வத்தை எடுத்துக்கொள்ள அவர்களுக்கு ஏகபோக உரிமை வழங்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன் நிதியமைச்சகத்தில் நடைபெற்ற பாரம்பரிய அல்வா கிண்டும் விழாவில் ஒரு பழங்குடியினர், தலித் அதிகாரியை கூட காண முடியவில்லை. மொத்தம் 20 அதிகாரிகள் மத்திய பட்ஜெட்டை தயார் செய்தனர். அவர்களில் ஒருவர் கூட பிற்படுத்தப்பட்டவரோ, தலித்தோ, பழங்குடியினரோ இல்லை. இந்திய மக்கள் தொகையில் தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் 73 சதவீதம் பேர் உள்ளனர். ஆனால், மத்திய பட்ஜெட் மூலமாக அவர்கள் எதையும் பெறவில்லை.

பாஜக வகுத்துள்ள சக்கர வியூகம் கோடிக்கணக்கான மக்களுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த சக்கர வியூகத்தை நாங்கள் உடைக்கப் போகிறோம். இதைச் செய்வதற்கான வழி, உங்களைப் பயமுறுத்தும் ஒன்று. அதுதான் சாதிவாரிக் கணக்கெடுப்பு. இந்த அவையில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ உத்தரவாத மசோதாவை இண்டியா கூட்டணி நிறைவேற்றும். அதேபோல், சாதிவாரிக் கணக்கெடுப்பை நிறைவேற்றுவோம். அது நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நடக்கும்.

இந்தியாவின் இயல்பு வேறு. ஒவ்வொரு மதத்திலும் சக்கர வியூகத்துக்கு எதிரான அமைப்பு உள்ளது. இந்து மதத்திலும் உள்ளது. பசுமைப் புரட்சி, சுதந்திரம், அரசியலமைப்பு ஆகியவற்றின் மூலம் நீங்கள் உருவாக்கிய சக்கர வியூகத்தை நாங்கள் உடைப்போம். நீங்கள் உங்களை இந்து என்று அழைக்கிறீர்கள். ஆனால், உங்களுக்கு இந்து மதத்தை பற்றி புரியவில்லை" என்று மக்களவையில் ராகுல் காந்தி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்