டெல்லியில் திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம்: ஐஏஎஸ் பயிற்சி மைய உரிமையாளர் கைது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்தில் வெள்ளம் புகுந்ததில், நீரில் மூழ்கி 2 மாணவிகள், ஒரு மாணவர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை கண்டித்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்ததாக, பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு டெல்லி பகுதியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான பயிற்சிமையங்கள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில்,ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையம் பழைய ராஜேந்திரா நகர் பகுதியில் உள்ளது. இங்கு, கேரளா,உத்தர பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் குடிமைப் பணி தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக ராவ் பயிற்சி மையத்தின் தரைதளத்துக்குள் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது. அங்குதான் பயிற்சி மையத்தின் நூலகம் செயல்பட்டு வந்துள்ளது. இதனால், ஏராளமானவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதில், 2 மாணவிகள், ஒரு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ராவ் பயிற்சி மையத்தின் தரைதளத்தை சேமிப்பகம் அல்லது வாகன நிறுத்தப் பகுதியாக மட்டுமே பயன்படுத்த டெல்லி மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கிய நிலையில் விதிகளை மீறி நூலகம் அமைத்திருந்ததாக பயிற்சி மையம் மீது புகார் எழுந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தீயணைப்பு படை அதிகாரிகள் கூறியதாவது: ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதள பகுதியில் மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டிருப்பதாக 27-ம் தேதி இரவு 7.19 மணி அளவில் தகவல்கிடைத்தது. இதையடுத்து, 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. உதவிக்கு தேசியபேரிடர் மீட்பு குழுவும் வரவழைக்கப்பட்டது.

மீட்பு பணி தொடங்கிய சில மணி நேரங்களில் 2 மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டன. நள்ளிரவுஒரு மாணவரின் உடல் மீட்கப்பட்டது. மீட்பு பணி 7 மணி நேரம் நீடித்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ராவ் ஐஏஸ் பயிற்சி மையம் தாழ்வான பகுதியில் இருந்ததால்வெள்ள நீர் விரைவாக தரைதளத்துக்குள் புகுந்தது தெரியவந்துள்ளது. மேலும், அங்கு சுமார் 150 பேர்அமரும் வகையிலான நூலகம் ஒன்றும் செயல்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கழிவு நீர் வாய்க்கால்கள் நிரம்பி, வெள்ள பாதிப்பு ஏற்பட்டதா என்றும்விசாரணை நடந்து வருகிறது.

மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, கட்டிட விதிகளைமீறி அடித்தளத்தை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தும் நிறுவனங்கள் மீதும், சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி மாநகராட்சி ஆணையருக்கு மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவிட்டுள்ளா்.

ராவ் பயிற்சி மையத்தில் குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகி வந்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களில் டானியா சோனி (25) தெலங்கானா மாநிலத்தையும், ஸ்ரேயா யாதவ் (25) உத்தர பிரதேசத்தையும், நிவின் டால்வின் (28) கேரளாவையும் சேர்ந்தவர்கள். அவர்கள் குறிப்பு எடுப்பதற்காக பயிற்சி மையத்தின் நூலகத்துக்கு சென்று வெள்ளத்தில் சிக்கினர் என்று தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட சில மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாணவர்கள் போராட்டம்: ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அவர்களது மரணத்துக்கு நீதி கேட்டுடெல்லி முழுவதும் மாணவர்களின் போராட்டம் நேற்று தீவிரம் அடைந்தது. டெல்லி மேயரின் வீட்டை முற்றுகையிட்டு பல்வேறு மாணவ அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்ததாக, ராவ் பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது: டெல்லியில் பயிற்சி மைய கட்டிடத்தின் அடித்தளத்தில் தண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. சில நாட்களுக்கு முன்னர்தான் மேற்கு டெல்யில் உள்ள படேல் நகரில் தண்ணீர் தேங்கிய தெருவைகடக்க முயன்றபோது ஐஏஎஸ் பயிற்சி மாணவர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். எனவே, இது நிர்வாக அமைப்பின் ஒட்டுமொத்தமான தோல்வி.

மாணவர்களை இழந்து வாடும்குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதுகாப்பற்ற கட்டுமானம், மோசமான நகரத் திட்டமிடல் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மைக்காக சாமானியர்கள் தங்களின் உயிரை விலையாக கொடுக்க வேண்டியுள்ளது. பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கை என்பது ஒவ்வொருவரின் உரிமை. அதை ஏற்படுத்தி தருவது அரசின் பொறுப்பு.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE