புதுடெல்லி: மாநில அரசுகள் மத்திய அரசோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நிதி ஆயோக்கின் 9-வது நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா உட்பட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, எச்.டி.குமாரசாமி, ஜிதன்ராம் மாஞ்சி, லல்லன் சிங், வீரேந்திர குமார், ராம் மோகன் நாயுடு, ஜூவல் ஓரம், அன்னபூர்ணா தேவி, சிராக் பாஸ்வான், இந்திரஜித் சிங் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சிகளை சேர்ந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்தனர். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சிறையில் உள்ளார். அவருக்கு பதிலாக டெல்லி யூனியன் பிரதேச அரசு சார்பில் கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை.
» மகாராஷ்டிரா ஆளுநராக சி.பி ராதாகிருஷ்ணன் மாற்றம்: புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமனம்
» டெல்லி மழை: யுபிஎஸ்சி பயிற்சி மையத்தில் வெள்ளம் - 2 மாணவிகள் உயிரிழப்பு
ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எனினும் அந்த மாநிலத்தின் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார். மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால் அவர் கூட்டத்தை புறக்கணித்ததாக தகவல் கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடி அறிவுரை - கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியரின் கனவு ஆகும். இதற்கு மாநில அரசுகள் முக்கிய பங்காற்ற வேண்டும். மாநில அரசுகளே, மக்களோடு நேரடி தொடர்பில் உள்ளன. எனவே மாநில அரசுகள், மத்திய அரசோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
அனைத்து மாநில அரசுகளும் தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். சர்வதேச தரத்தில் திட்டங்கள், கொள்கைகளை உருவாக்கி திறம்பட செயல்படுத்த வேண்டும். அந்நிய முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்க வேண்டும். இவற்றின் மூலம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற லட்சிய கனவை, நனவாக்க முடியும்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால் அவர் பாதியிலேயே வெளிநடப்பு செய்தார்.
'மைக்கை அணைத்தனர்': இதுகுறித்து செய்தியாளர்களிடம் மம்தா கூறியதாவது: மாநில அரசுகளை, மத்திய அரசு பாரபட்சமாக நடத்தக் கூடாது என்ற கருத்தை கூட்டத்தில் எடுத்துரைக்க விரும்பினேன். எனக்கு முன்பு பேசிய முதல்வர்களுக்கு 20 நிமிடங்கள் வரை நேரம் ஒதுக்கப்பட்டது. எனக்கு 5 நிமிடங்கள் மட்டுமே பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. நான் பேசிக் கொண்டிருந்தபோதே மைக்கை அணைத்துவிட்டனர். இது மேற்குவங்கத்தை அவமதிக்கும் செயல் ஆகும். இவ்வாறு முதல்வர் மம்தா தெரிவித்தார்.
காலை 11 மணிக்கு தொடங்கிய நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கூட்டம் மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. மம்தாவின் குற்றச்சாட்டு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
‘பொய் பேசக்கூடாது’: நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். அவர் பேசியதை நாங்கள் கேட்டோம். ஒவ்வொரு முதல்வருக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டது. முதல்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மேஜையின் திரையில் காண்பிக்கப்பட்டது. முதல்வர் மம்தாவுக்கும் உரிய நேரம் ஒதுக்கப்பட்டது. அவர் பேசும்போது மைக் அணைக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். இது முற்றிலும் தவறானது. அவர் உண்மையை பேச வேண்டும். பொய்களை பேசுவது அழகல்ல என்று தெரிவித்தார்.
நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்பிரமணியம் கூறியது: மாநிலங்களின் ஆங்கில எழுத்து வரிசைப்படி அந்தந்த மாநிலங்களின் முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் கொல்கத்தாவுக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்று கூறி முன்கூட்டியே பேச முதல்வர் மம்தா கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று அவருக்கு முன்கூட்டியே வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக பேச அவர் விரும்பினார். ஆனால் அவ்வாறு பேச முடியாது.
கூட்டத்தில் பங்கேற்காத முதல்வர்கள் குறித்து எதுவும் கூற விரும்பவில்லை. அது அவர்களின் இழப்பு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
56 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago