டெல்லி மழை: யுபிஎஸ்சி பயிற்சி மையத்தில் வெள்ளம் - 2 மாணவிகள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை கனமழை பொழிந்தது. இந்நிலையில், அங்குள்ள பிரபல தனியார் யுபிஎஸ்சி பயிற்சி மையத்தின் தரைக்கு கீழ்த்தளத்தில் (பேஸ்மெண்ட்) வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி மாணவிகள் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் மாயமானார்.

சனிக்கிழமை மாலை டெல்லியில் பரவலாக மழை பதிவானது. இந்த சூழலில் 7 மணி அளவில் டெல்லி தீயணைப்பு துறைக்கு மத்திய டெல்லியின் பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் அமைந்துள்ள யுபிஎஸ்சி பயிற்சி மையத்தில் நீர் தேங்கியது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்துள்ளனர். அங்கு அவர் சென்ற போது தரைக்கு கீழ்த்தளம் முழுவதும் நீரால் நிரம்பி காணப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர், உள்ளூர் காவல் துறையினரும் வந்தனர். அவர்கள் மேற்கொண்ட மீட்பு பணியில் நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு மாணவிகளின் உடல் மீட்கப்பட்டது. மாயமான ஒருவரின் உடலை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணையை தலைமைச் செயலாளர் மேற்கொள்ள வேண்டும் என டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்தார். மேலும், அந்த அறிக்கையை 24 மணி நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மலிவால், எம்எல்ஏ துர்கேஷ் பதக், பாஜக எம்பி பன்சூரி ஸ்வராஜ், டெல்லி மேயர் ஷெல்லி ஆகியோர் வந்து பார்வையிட்டனர். மேலும், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டும் வைத்தனர்.

டெல்லியில் பருவ மழைக்காலத்தின் போது தண்ணீர் தேங்குவது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. டெல்லி நகரத்தின் தற்போதைய வடிகால் சார்ந்த மாஸ்டர் பிளான் (திட்டம்) கடந்த 1976-ல் உருவாக்கப்பட்டது. அது இதற்கு ஒரு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போதைய மக்கள் தொகையை காட்டிலும் தற்போது நான்கு மடங்கு டெல்லியில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இருந்தும் புதிய வடிகால் வசதி சார்ந்த திட்டம் இன்னும் அரசால் செயல்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடம் தாழ்வான பகுதி என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மாணவர்கள் சிலர் டெல்லியில் நள்ளிரவில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE