நவி மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்

By செய்திப்பிரிவு

நவி மும்பை: நவி மும்பையின் ஷாபாஸ் கிராமத்தில் இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்து நவி மும்பை தீயணைப்புத்துறையின் துணை அதிகாரி புருஷோத்தமன் ஜாதவ் கூறுகையில், “எங்களுக்கு அதிகாலை 4.30 மணிக்கு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக அழைப்பு வந்தது. இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் இரண்டு பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. அவர்களையும் மீட்பதற்கான பணிகள் நடந்து வருகின்றது” என்று தெரிவித்தார்.

நவி மும்பை மாநகராட்சி ஆணையர் கைலாஷ் ஷிண்டே கூறுகையில், “இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் கட்டிடம் இடிந்து விழுந்திருக்கிறது. இது தரைத்தளத்துடன் கூடிய மூன்று மாடி கட்டிடம். இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் இரண்டு பேர் சிக்கியிருக்கலாம். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் இங்கே உள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்தார்.

முன்னதாக, ஜூலை 20-ம் தேதி, மும்பையின் கிராண்ட் சாலை அருகே உள்ள ரூபினா மான்சில் என்ற கட்டிடத்தின் பால்கனியின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.13 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம், கிராண்ட் சாலை ரயில் நிலையம் அருகே முற்பகல் 11 மணிக்கு நடந்தது.

மகாராஷ்டிராவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பொது போக்குவரத்து ஸ்தம்பித்து, பல பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை மத்திய மகாராஷ்டிராவுக்கு ஆரஞ்சு அலார்ட் விடுத்துள்ளது.

மகாஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மும்பை உட்பட பல நகரங்களில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE