மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது ஏன்? - கேரள, மே.வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மாநில அரசுகள் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தது ஏன் என்று மத்திய அரசு, கேரள, மேற்கு வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மேற்கு வங்க சட்டப் பேரவையில் 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஓராண்டுக்கும் மேலாக அவற்றை ஆளுநர்நிலுவையில் வைத்து உள்ளதாக மாநில அரசு குற்றம்சாட்டியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

அதேபோல், கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானும், கேரள மாநில அரசு இயற்றியுள்ள 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்துள்ளதாக அந்த மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

கேரள அரசு தரப்பில் மூத்தவழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறும்போது, ‘‘கேரள மாநில பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ஆரிப் முகமது கான் நிறுத்தி வைத்துள்ளார். இதுதொடர்பாக விசாரித்தபோது அந்த மசோதாக்களை, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியிருப்பதாகத் தெரியவந்து உள்ளது. இந்த விஷயத்தில் கேரள ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக நடந்து கொள்கிறார்’’ என்றார்.

வழக்கறிஞரின் வாதத்தைக் கேட்ட பின்னர் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மாநில அரசுகளின் மனு குறித்து பதிலளிக்கும்படி கேரள ஆளுநர் அலுவலகத்துக்கும், மேற்கு வங்க ஆளுநர் அலுவலகத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

மேலும் இதுதொடர்பாக மத்திய அரசும் பதில் அளிக்கவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE