ரீல்ஸ் வீடியோ பதிவு செய்த 1,600 பயணிகளுக்கு அபராதம்: டெல்லி மெட்ரோ நடவடிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பொது இடங்களில் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளது.

இதில் மெட்ரோ ரயில் நிலையவளாகத்திலும், ரயில் பெட்டிக்குள்ளும் ரீல்ஸ் வீடியோ எடுப்பது, ரயில் பெட்டியின் தரையில் அமர்ந்து பயணம் செய்வது, பயணத்தின்போது சாப்பிடுவது உள்ளிட்ட சக பயணிகளுக்கு தொல்லைகொடுக்கக்கூடிய செயல்களை செய்து வந்த 1,647 பேர் மீது மெட்ரோ ரயில் சட்டப்பிரிவு 59-ன்கீழ் வழக்கு பதிவு செய்து டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் அபராதம் விதித்துள்ளது.

கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் எடுக்கப்பட்ட சட்டரீதியான நடவடிக்கை இது என்று மெட்ரோ தரப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் மெட்ரோ ரயில்நிலையத்தில் நிகழ்ந்த பிரச்சினைகளுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் 3 சதவீதம் அதிகமாகி இருப்பதாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் விகாஸ் குமார் கூறும்போது, "மெட்ரோ ரயில் வளாகத்துக்குள் தொல்லை தருபவர்களுக்கு அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. இதன் மூலம்விதிமீறல் நிகழ்வதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். சக பயணிகளுக்குத் தொல்லை கொடுக்கும் காரியங்களில் ஈடுபடக் கூடாதுஎன்று ஆன்லைன் மூலமாகவும், சுவரொட்டிகள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. டெல்லியில் உள்ள பல மெட்ரோ ரயில் நிலையங்களில் ரீல்ஸ் வீடியோ எடுக்க வேண்டாம் என்கிற வாசகத்துடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஆனாலும், தினமும் 67 லட்சம்பயணிகள் பயன்படுத்தி வரும் டெல்லி மெட்ரோ சேவையைக் கண்காணிக்க போதுமான ஆள் பலம்எங்களிடம் இல்லை. வளாகம்முழுவதும் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகள்வழியாக நடக்கும் தவறுகள் தெரிய வருகிறது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE