சுரங்கங்கள், கனிம நிலங்கள், குவாரிகளுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சுரங்கங்கள், கனிம நிலங்கள், குவாரிகளுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. சுரங்கம் மற்றும் கனிம நிலங்களை குத்தகைக்கு எடுப்பவர்கள், அரசுக்கு செலுத்தும் ராயல்டி தொகை என்பது வரி அல்ல. அது குத்தகை கட்டணம்தான் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள சுரங்கத்தை இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தது. அதற்காக, தமிழக அரசுக்கு அந்த நிறுவனம் ராயல்டி (உரிமைத் தொகை) வழங்கியது. ஆனால், அத்துடன் சேர்த்து தமிழக அரசு ‘செஸ்’ வரியும் விதித்தது. இதையடுத்து, ‘சுரங்கங்கள், கனிம நிலங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை. எனவே, தமிழகஅரசு விதித்த வரியை திரும்ப பெற வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. தங்கள் பகுதிக்கு உட்பட்ட கனிம நிலத்தை பயன்படுத்த வரி விதிக்கும் அதிகாரம் தங்களுக்கு உண்டு என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 1989-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு, ‘சுரங்கங்கள், குவாரிகளை உள்ளடக்கிய நிலங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உள்ளது. மாநில அரசுகளுக்குஇல்லை. குத்தகை எடுப்பவர்கள்தரும் ராயல்டியை மட்டுமே மாநில அரசுகள் பெற முடியும். ராயல்டி என்பதே வரிதான்’ என்று தீர்ப்பு வழங்கியது.

ராயல்டி என்பது வரியா, குத்தகை கட்டணமா? கனிம நிலங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறதா, இல்லையா? என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வந்தது. மத்திய அரசும், பல்வேறு சுரங்க நிறுவனங்களும் மாநில அரசுகளுக்கு வரி விதிக்கும் அதிகாரம் இல்லை என்று கூறி மனுக்களை தாக்கல் செய்தன.

இதுதொடர்பாக இதுவரை80 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2011-ம் ஆண்டில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி உள்ளிட்ட 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சுரங்கங்கள், குவாரிகளை உள்ளடக்கிய நிலங்களுக்கு வரி விதிப்பதை, நாடாளுமன்றத்தின் சுரங்கங்கள், கனிமங்கள் (மேம்பாடு, ஒழுங்குமுறை) 1957 சட்டம்(எம்எம்டிஆர்) வரையறுக்கவில்லை. ஆனால், அரசியலமைப்பின் 246-வது பிரிவின்கீழ் சுரங்கங்கள், குவாரிகளுக்கு வரி விதிக்கும் அதிகாரத்தை மாநில சட்டப்பேரவைகள் பெறுகின்றன. எனவே, எம்எம்டிஆர் சட்டத்தின் மூலம், மாநில அரசுகள் தங்கள் வரம்புக்குள் வரக்கூடிய சுரங்கங்கள், குவாரிகளுக்கு வரி விதிப்பதை கட்டுப்படுத்த முடியாது.

‘மாநிலங்கள் பெறும் ராயல்டி என்பது வரிதான்’ என்று கடந்த 1989-ல் உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்புதவறானது. சுரங்கங்களை குத்தகைக்கு எடுப்பவர்கள், மாநில அரசுகளுக்கு செலுத்தும் ராயல்டிஎன்பது வரி அல்ல. அது குத்தகை கட்டணம்தான். இவ்வாறு தீர்ப்பில்கூறப்பட்டுள்ளது.

ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பு: நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். ‘சுரங்கங்கள், கனிம நிலங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை’ என்று அவர் தீர்ப்பளித்தார். பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பே இறுதி செய்யப்பட்டது.

இதுவரை கனிம நிலங்களை பயன்படுத்தியதற்கான வரி நிலுவையை மாநில அரசுகளுக்கு நிறுவனங்கள் செலுத்த வேண்டுமா அல்லது இனி வரும் நாட்களுக்குத்தான் இந்த தீர்ப்பு பொருந்துமா என்பது குறித்து வரும் 29-ம் தேதி விளக்கம் அளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE