பேரவைக் கூட்டத்துக்கு குகி-ஸோ எம்எல்ஏக்களை தனிபட்ட முறையில் அழைப்பேன்: மணிப்பூர் முதல்வர்

By செய்திப்பிரிவு

இம்பால்: நடைபெற இருக்கும் மணிப்பூர் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்குமாறு 10 குகி-ஸோ எம்எல்ஏக்களுக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு அனுப்புவேன் என்று அம்மாநில முதல்வர் என்.பைரேன் சிங் தெரிவித்தார்.

இம்பாலில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய முதல் பைரேன் சிங், "வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க தனிப்பட்ட முறையிலும், சட்டப்பேரவை மூலமாகவும் அவர்களுக்கு (குகி-ஸோ எம்எல்ஏக்கள்) அழைப்பு அனுப்புவேன். அவர்கள் எங்களுடன் இணைந்து கொள்ள வேண்டும், ஒத்துழைப்பு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.

தொடர்ந்து தனது டெல்லி பயணம் குறித்து பேசிய மணிப்பூர் முதல்வர், "நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தான் நான் டெல்லிக்குச் செல்கிறேன். அதனைத் தொடர்ந்து முதல்வர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. அதில் நாங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்போம். மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து எடுத்துக்கூறி, நடந்துவரும் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பேன். நேர்மறையான விளைவுகள் உண்டாகும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

ஜிரிபம் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு நடந்த தீ வைப்பு சம்பவம் குறித்த நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த பைரன் சிங், "அதுகுறித்து நான் விசாரித்தேன், இரண்டு சமூகத்தின் தலைவர்களிடமும் பேசினேன். அந்தச் சம்பவத்தில் இரண்டு சமூகத்தினரும் ஈடுபடவில்லை. இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது வன்முறைத் தொடர விரும்புகிறவர்களின் வேலையாகத் தெரிகிறது" என்று தெரிவித்தார்.

புதன்கிழமை இரவு ஜிரிபம் மாவட்டத்தில் யாரும் இல்லாத வீடு ஒன்றுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர். மாவட்டத்தில் வன்முறை தொடங்கியதும் வீட்டின் உரிமையாளர்கள் அதனைக் கைவிட்டுச் சென்றனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

மணிப்பூர் மாநிலத்தின் சட்டப்பேரவையின் 6-வது கூட்டத் தொடர் ஜூலை 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தப் பின்னணியில் பைரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் நடைபெற்று வரும் இனக் கலவரம் காரணமாக கடந்த இரண்டு பேரவைக் கூட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் உட்பட 10 குகி-ஸோ பழங்குடியின எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. ஐந்தாவது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் பிப்ரவரி 28 முதல் மார்ச் 5 வரை நடந்தது. நான்காவது கூட்டப்பேரவைத் தொடர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி நடந்தது. குகி-ஸோ எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளாத நிலையில், தொடங்கிய 11 நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE