“மக்களைக் காப்பதே எனது மதம்” - கன்வர் யாத்திரை பக்தர்களின் உயிர் காத்த முஸ்லிம் காவலர்

By செய்திப்பிரிவு

ஹரித்வார்: கன்வர் யாத்திரை மேற்கொண்ட இந்து பக்தர்களை ஒரு முஸ்லிம் காவலர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலங்களில் சிவ பக்தர்கள் மேற்கொள்ளும் வருடாந்திர கன்வர் யாத்திரை தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 22-ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெற உள்ளது. கங்கை நதியை ஒட்டியுள்ள புனித தலங்களுக்கு சிவ பக்தர்கள் நடைப்பயணமாக சென்று அங்கு கலசங்களில் நீரை சேகரித்து வந்து தங்கள் ஊர்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.

இந்த புனித யாத்திரையின்போது சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை கருத்தில் கொண்டு யாத்திரை பாதையில் உள்ள உணவகங்களில் அவற்றின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் பெயர்களை எழுதி வைக்க யோகி தலைமையிலான உ.பி. அரசு உத்தரவிட்டது சர்ச்சையானது. இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பாஜகவின் கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. முஸ்லிம் கடைகளை பக்தர்கள் தவிர்ப்பதை உறுதிப்படுத்தவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில் கங்கை நீரை எடுக்கும்போது நீரில் மூழ்கிய ஐந்து கன்வாரியாக்களை காப்பாற்றியுள்ளார் மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) தலைமை கான்ஸ்டபிள் ஆஷிக் அலி. கன்வர் யாத்திரை மேற்கொண்ட இந்து பக்தர்களை ஒரு முஸ்லிம் காவலர் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்ஸ்டபிள் ஆஷிக் அலி தனித்தனி சம்பவங்களில் ஐந்து கன்வாரியாக்களை காப்பாற்றியிருக்கிறார். ஹரித்வாரின் காங்க்ரா நதிக்கரையில் பணியில் உள்ளார் ஆஷிக் அலி.

ஹரியாணாவின் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 21 வயது சிவ பக்தரான மோனு என்பவர் செவ்வாயன்று காங்க்ரா நதிக்கரையில் கங்கையின் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார். உடனடியாக காவலர் அலி தனது சக பணியாளர்களுடன் சேர்ந்து ஆற்றில் குதித்து அவரைக் காப்பாற்றினர். அதேநாளில் உதம் சிங் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான கோவிந்த் சிங் என்பவரையும் ஆஷிக் அலி காப்பாற்றினார்.

அதற்கு ஒருநாள் முன்னதாக, திங்களன்று கோரக்பூரைச் சேர்ந்த 21 வயதான சந்தீப் சிங், டெல்லியைச் சேர்ந்த 17 வயதான கரண் மற்றும் ஹரியாணாவின் பானிபட்டைச் சேர்ந்த 15 வயது அங்கித் ஆகியோரை ஆஷிக் அலி காப்பாற்றினார். கன்வர் யாத்திரை சர்ச்சைகளுக்கு மத்தியில் இஸ்லாத்தை சேர்ந்த ஆஷிக் அலி கன்வாரியாக்களை காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஆஷிக் அலி, "மக்களின் உயிரைக் காப்பதே எனது மதம். நீரில் மூழ்கும் ஒருவரின் சாதி அல்லது மதத்தைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. என்னைப் பொறுத்தவரை, அவர் ஒரு மனிதர். அவரது உயிரைக் காப்பாற்றுவதே எனது மதம். ஒருவரைக் காப்பாற்றும் போது, எனக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது" என்று கூறி மேலும் நெகிழ வைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE