வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு: கேரள கிரிக்கெட் சங்க பயிற்சியாளர் மீது புகார்

By செய்திப்பிரிவு

கேரள மாநிலத்தில் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சிறுமிகளும் இருப்பது அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது.

இது குறித்து ‘தி இந்து’ குழுமத்தின் ஸ்போர்ட்ஸ்டாரில் செய்தி வெளியாகி உள்ளது. கேரளாவில் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் லீகின் முதல் சீசன் நடைபெற உள்ளது. இந்த சூழலில் இது கவனம் பெற்றுள்ளது.

கிரிக்கெட் பயிற்சியாளர் எம்.மனு என்பவர் தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் நீதிமன்ற காவலில் உள்ளார். அவருக்கு எதிராக ஆறு வீராங்கனைகள் புகார் தெரிவித்துள்ளனர். அவர் கேரள கிரிக்கெட் லீகின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே அவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வீராங்கனை இந்த தொடரில் பங்கேற்க வந்துள்ளார். அப்போது அவர் டிசிஎம் பிங்க் அணியின் பயிற்சியாளராக செயல்படும் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதோடு அவர் புகாரும் கொடுத்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2022-ல் பயிற்சியாளர் மனு, போக்சோ வழக்கில் இருந்து விடுதலையாகி உள்ளார். பாதிக்கப்பட்டவர் தனது வாக்குமூலத்தை மாற்றிக் கொண்டது இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் தான் அவர் மீது தற்போது பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் சுமார் ஆறு பேர் புகார் தெரிவித்துள்ளனர். இவர்கள் 2018 முதல் 2024 மே வரையில் பாதிக்கப்பட்டவர்கள் என தகவல். அவர் மகளிர் கிரிக்கெட் பயிற்சியாளராக செயல்பட கூடாது என பெற்றோர்களும் தெரிவித்துள்ளனர்.

தன்னிடம் பயிற்சி பெற வரும் வீராங்கனைகளை மிரட்டி, சிசிடிவி கேமரா இல்லாத இடத்தில் இதனை பயிற்சியாளர் மனு செய்துள்ளார் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அவருக்கு கேரள கிரிக்கெட் சங்கத்தின் பாதுகாப்பு இருப்பதாகவும் சொல்லியுள்ளனர். மேலும், ஏப்ரல் மாதம் பணியில் இருந்து விலகிய மனுவை ஏன் மே மாதம் பயிற்சியாளராக கேரள கிரிக்கெட் சங்கம் நியமித்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கிரிக்கெட் சங்கம் விளக்கம்: இது தொடர்பாக போலீஸார் விசாரணைக்கு வந்த போதுதான் எங்களுக்கு இந்த விவகாரம் தெரியவந்தது. மேலும், ஏற்கெனவே அவர் மீதான வழக்கில் இருந்து கேரள உயர் நீதிமன்றம் விடுவித்த பிறகு தான் நாங்கள் அவரை மீண்டும் பயிற்சியாளராக நியமித்தோம். பெற்றோர்களும் அவரை பயிற்சியாளராக நியமிக்குமாறு தெரிவித்தனர்.

கிரிக்கெட் சங்கத்தின் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்படி சிலர் செய்கிறார்கள். நாங்கள் பயிற்சியாளர் மனுவை எந்த வகையிலும் பாதுகாக்கவில்லை. போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பயிற்சியாளர் மனுவுக்கு மாற்றாக பெண் பயிற்சியாளர் ஒருவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE