கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ.,க்கள் உள்ளிருப்புப் போராட்டம்: சித்தராமையாவுக்கு நெருக்கடி

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ.,க்கள் நேற்று (புதன்கிழமை) இரவு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் (MUDA) ஊழல் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி கோரியும், முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் பாஜக எம்எல்ஏ.,க்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக், பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா உள்ளிட்ட பாஜக எம்எல்ஏ.,க்களுக்கு மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி எம்எல்ஏ.,க்கள் சிலரும் ஆதரவு தெரிவித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் பங்கேற்றனர். நேற்றிரவு சட்டப்பேரவைக்கு படுக்கைகளுடன் வந்த பாஜக, மஜத எம்எல்ஏ.,க்கள் அங்கேயே படுத்து உறங்கினர். இந்த வீடியோ காட்சிகளை கர்நாடகா பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இப்போராட்டம் குறித்து விஜயேந்திரா எடியூரப்பா எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவையும் பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தது.

விஜயேந்திரா அந்தப் பதிவில், “முதல்வர் சித்தராமையா செய்த மைசூரு முடா ஊழலைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அவர் பதவி விலக வேண்டும். மாநிலத்துக்கு வளர்ச்சி ஏற்படுத்தாத காங்கிரஸ் கட்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சித்தராமையாவும், அவரது அரசாங்கமும் பட்டியலின மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளது. பட்டியலின மக்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டிய கோடிக்கணக்கான பணத்தை முறைகேடு செய்துள்ளது. பட்டியலின மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

ஏற்கெனவே வால்மீகி ஊழலும் முதல்வர் மீது உள்ளது. இப்போது இந்த முடா ஊழல் மூலம் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பெயரில் 14 மனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல்வர் பதவிக்கான கண்ணியத்தையும், கவுரவத்தையும் சித்தராமையா சிதைத்துவிட்டார். அவர் பதவி விலக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வால்மீகி ஊழல் பின்னணி: கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் ரூ.187.3 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதற்கு ஒத்துழைக்க மறுத்ததால் தனக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக கூறி, அதன் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.பத்மநாபா, தலைமை கணக்காளர் பரசுராம், யூனியன் வங்கியின் எம்ஜிசாலை கிளை மேலாளர் சுஷ்சிதா உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.14.5கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த‌ நாகேந்திரா, ஆணையத்தின் தலைவர் பசனகவுடா தட்டல், நாகேந்திராவின் உதவியாளர் ஹரீஷ் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து நாகேந்திராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற‌னர்.

இந்நிலையில், கர்நாடக அரசின் சமூக நலத்துறை கூடுதல் இயக்குநரும், வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் முன்னாள் இணை இயக்குநருமான கல்லேஷ் பெங்களூரு சேஷாத்ரிபுரம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “பழங்குடியினர் ஆணைய நிதி முறைகேடு தொடர்பாக கடந்த 16‍ மற்றும் 18 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மித்தல், முரளி கண்ணன் ஆகியோர் என்னை விசாரித்தினர். இரு நாட்களும் என்னிடம் 17 கேள்விகள் கேட்டனர். அப்போது முதல்வர் சித்தராமையாவின் வழிகாட்டு தலின்படியே நிதியை எம்ஜி சாலை வங்கிக் கிளைக்கு மாற்றினேன் என பொய்யாக வாக்குமூலம் தர வேண்டும் என நெருக்கடி கொடுத்தனர். அதற்கு மறுத்ததால் 2 அதிகாரிக‌ளும் என்னை கைதுசெய்யப்போவதாக மிரட்டி வருகின்றனர். மேலும் சித்தராமையாவுக்குஎதிராக சதி செய்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, அமலாக்கத் துறை அதிகாரிகளான மித்தல், முரளி கண்ணன் ஆகியோர் மீது முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக சதி செய்ததாக‌ 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வால்மீகி ஊழல் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்குள் கர்நாடகாவில் முடா ஊழல் தொடர்பான எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE