பட்ஜெட்டில் பாரபட்சம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு: நாடாளுமன்றத்தில் அமளி, வெளிநடப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக கூறி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மக்களவையில் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதில், ஆந்திரா, பிஹாருக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, பிற மாநிலங்களை பாஜக தலைமையிலான அரசு புறக்கணித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

முன்னதாக, மாநிலங்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின்தேசிய தலைவருமான மல்லிகார்ஜுனகார்கே பேசியதாவது: மத்திய பட்ஜெட்டில் பிஹார், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமேஅதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. பிஹார், ஆந்திரா தவிர வேறுஎந்த மாநிலங்களுக்கும் மோடி அரசின்இந்த பட்ஜெட் பலன் அளிக்கவில்லை. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால்,மோடியை நிராகரித்த மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் எதுவும் கிடைக்கவில்லை.

பெரும்பாலான மாநிலங்களின் பெயர்கள் பட்ஜெட்டில் இடம்பெறாத நிலையில், 2 மாநிலங்களின் தட்டில் மட்டும் ஜிலேபி, பக்கோடா ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. தனது நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கான ஆவணமாகவே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது இதில் இருந்து தெளிவாகிறது. மேலும், மாநிலங்களுக்கு இடையே சமநிலை இல்லாமல் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு கார்கே பேசினார்.

இதற்கிடையே, பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுமதிக்க வேண்டும் என கார்கேவிடம் மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர்வலியுறுத்தினார். அப்போது கார்கே, “நிதி அமைச்சர் பேசுவதில் வல்லவர் என்று எனக்கு தெரியும். அதனால், அதற்குள் நான் பேசி முடித்துவிடுகிறேன்’’ என்றார்.

எதிர்க்கட்சியினர் அமளி: பட்ஜெட் விவாதத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசத் தொடங்கியபோது, கார்கே தலைமையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

பெயர் இல்லாதது தற்செயல் நிகழ்வு: பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படாதது தற்செயலான நிகழ்வு. பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலும், கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட முழு பட்ஜெட்டிலும் பல மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. அதற்காக, அரசின் திட்டங்களால் அந்த மாநிலங்கள் பயனடையவில்லை என்று கூறமுடியுமா.

உதாரணத்துக்கு, 2 பட்ஜெட்டிலும் மகாராஷ்டிர மாநிலத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அந்த மாநிலத்தின் தஹானு நகரில் ரூ.76,000 கோடி மதிப்பில் வாதவன் துறைமுகம் அமைக்கும் திட்டத்துக்கு கடந்த மாதம் அனுமதிவழங்கப்பட்டது. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் கூடிய அரசின் திட்டங்கள் வழக்கமான முறையில் மாநிலங்களை சென்றடைகின்றன.

இந்த குற்றச்சாட்டை கூறும் முன்பாக காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம். அவர்கள் சமர்ப்பித்த எல்லா பட்ஜெட்டிலும் ஒவ்வொருமாநிலத்தின் பெயரும் இடம்பெற்றது என்பதை உறுதியாக கூறமுடியுமா. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஏற்க முடியாதது. இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE