நாடு முழுவதும் சாலை விபத்துகளில் 5 ஆண்டுகளில் 7.77 லட்சம் பேர் உயிரிழப்பு: மத்திய அரசு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் 2018 முதல் 2022 வரை சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 423 என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள்: இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறை அளித்த தகவல்களை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் இன்று (ஜூலை 24) எழுத்துபூர்வமாக தெரிவித்தார். அது குறித்த விவரம்: 2018-ம் ஆண்டில் 1,57,593 பேர், 2019-ம் ஆண்டில் 1,58,984 பேர் உயிரிழந்துள்ளனர். 2020-ம் ஆண்டில் 1,38,383 பேரும், 2021-ம் ஆண்டில் 1,53,972 பேரும், 2022-ம் ஆண்டில் 1,68,491 பேரும் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இந்த 5 ஆண்டுகளில் 7 லட்சத்து 77 ஆயிரத்து 423 பேர் உயிரிழந்துள்ளனர்.

2022-ம் ஆண்டில் போக்குவரத்து விதிகளை மீறியதால், உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்கள்: வாகனங்களை அதிக வேகத்தில் இயக்கியதால் ஏற்பட்ட விபத்தில் 1,19,904 பேர் உயிரிழந்தனர். ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை இயக்கியதால் ஏற்பட்ட விபத்தில் 4,201 பேரும், தவறான பாதைகளில் சென்றதால் ஏற்பட்ட விபத்தில் 9,094 பேரும், சிவப்பு விளக்கு எல்லையைத் தாண்டியதால் ஏற்பட்ட விபத்தில் 1,462 பேரும், மொபைல் போன் பேசிக்கொண்டே சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 3,395 பேரும், மற்ற காரணங்களால் 30,435 பேரும் உயிரிழந்துள்ளனர்.

20,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள்: நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் எஞ்சியுள்ள 20,000 கிலோ மீட்டர் தூரத்திற்கான நெடுஞ்சாலைகளை அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்த பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டுகளில் சாலை கட்டுமானங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நடந்து வரும் திட்டப் பணிகளில் ஏற்பட்டுள்ள தடைகளைக் களையும் முறைகளை மேம்படுத்தப்படும். நாட்டில் நெடுஞ்சாலைகளை அமைப்பதில் வேகத்தை அதிகரிக்க அதிவேக மாதிரி முறையை பின்பற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன மின்னேற்ற நிலையங்கள்: தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 5293 மின்சார வாகன மின்னேற்ற நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ரூ.178 கோடி செலவில் 4,729 மின்னேற்ற நிலையங்கள் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டதாகும். இதில் தமிழகத்தில் 369 மின்னேற்ற நிலையங்களும், பாண்டிச்சேரியில் இரண்டு மின்னேற்ற நிலையங்களும், கேரளாவில் 138 மின்னேற்ற நிலையங்களும், கர்நாடகாவில் 300 மின்னேற்ற நிலையங்களும், ஆந்திரப் பிரதேசத்தில் 249 மின்னேற்ற நிலையங்களும், தெலங்கானாவில் 221 மின்னேற்ற நிலையங்களும் உள்ளன.

கனரக தொழில் துறை அமைச்சகத்தின் சார்பில் நெடுஞ்சாலைகளில் மொத்தம் 5833 மின்சார வாகன மின்னேற்ற நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தமிழ்நாட்டில் 649 மின்னேற்ற நிலையங்களும், புதுச்சேரியில் 16 மின்னேற்ற நிலையங்களும், கேரளாவில் 189 மின்னேற்ற நிலையங்களும், ஆந்திரப்பிரதேசத்தில் 319 மின்னேற்ற நிலையங்களும், தெலங்கானாவில் 244 மின்னேற்ற நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE