நீட் விவகாரத்தில் ராகுல் மன்னிப்பு கேட்பாரா? - உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி பாஜக கேள்வி 

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீட் இளநிலை தேர்வில் சில இடங்களில் தேர்வுத் தாள் கசிந்ததைத் தொடர்ந்து இந்திய தேர்வு முறை மீது ராகுல் காந்தி அவநம்பிக்கையை தூண்டி விடுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினைத் தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்பாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

நீட் தேர்வின் புனிதத் தன்மை கெடவில்லை என்று கூறி மறுதேர்வு நடத்த அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பாஜக பிரமுகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிப்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக சாடியுள்ளார்.

ரவிசங்கர் கூறுகையில், “இந்திய தேர்வு முறை குறித்து ராகுல் காந்தி கடுமையான வார்த்தைகள் மூலம் தேர்வு முறைக்கு உலக அளவில் அவதூறு ஏற்படுத்துகிறார்.

அவர் தேர்ந்தெடுத்து பயன்படுத்தும் வார்த்தைகள் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும், அவர் வகிக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியின் கண்ணியத்தையும் மீறுவதாகும். நீட் தேர்வு விவகாரம் தொடர்பான விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய 155 தேர்வர்களின் முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நீட் தேர்வினை 571 நகரங்களில் உள்ள 4,750 தேர்வு மையங்களில், சுமார் 23.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இந்த ஒட்டுமொத்த தேர்வு முறையையும் தாக்கும் வகையில் ராகுல் காந்தி மோசடி போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார். ஆனால், நீட் தேர்வின் புனிதத் தன்மை கெடவில்லை என்று கூறி மறுதேர்வு நடத்த அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி இப்போது மன்னிப்பு கேட்பாரா?. காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் அதிக அளவில் தேர்வு தாள் கசிவு சம்பவங்கள் நடந்தன. தேர்வு தாள் கசிவுக்கு எதிராக மோடி அரசு கடுமையான சட்டங்கள் இயற்றியுள்ளது” என்று தெரிவித்தார்.

முன்னதாக, இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி 40-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு தொடுத்தவர்களில் சிலர் இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தனர். வேறு சிலர், தேர்வை ரத்து செய்யக்கூடாது; மறு தேர்வு நடத்த தேசிய தேர்வு முகமைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, செவ்வாய்க்கிழமை தனது தீர்ப்பை வழங்கியது. அப்போது, “நீட் வினாத்தாள் பரவலாக கசியவில்லை என்ற சென்னை ஐஐடி-ன் அறிக்கையை அரசு தாக்கல் செய்துள்ளது. தேசிய தேர்வு முகமை வழங்கிய தரவுகளை நீதிமன்றம் சுயமாக ஆய்வு செய்துள்ளது.

பதிவேட்டில் உள்ள தகவல்களின் அடிப்படையில், தற்போதைய நிலையில், தேர்வின் முடிவு மோசமாக உள்ளது மற்றும் தேர்வின் புனிதத்தன்மைக்கு திட்டமிட்ட ரீதியில் மீறல் நடந்துள்ளது என்பதைக் காட்டுவதற்கான அறிகுறிகள் இல்லை.

மறு தேர்வு நடத்த உத்தரவிட்டால் அது 23 லட்சம் மாணவர்களுக்கு தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தும். இளநிலை நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய உத்தரவிடுவது, நியாயமாக இருக்காது என்று நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE