பிஹாருக்கு ரூ.26,000 கோடி நிதியுதவி: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிஹாருக்கு மத்திய அரசு சிறப்புஅந்தஸ்து அளிக்க மறுத்துவிட்டாலும் தாராளமாக நிதியுதவி அளித்துள்ளது. பிஹாரில் பல்வேறு சாலை திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.26,000 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது: பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் முழு வளர்ச்சிக்காக பூர்வோதயா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும். அமிர்தசரஸ் - கொல்கத்தா தொழில் வழித்தடத்தில், பிஹாரில் உள்ள கயாவில் தொழில் வளர்ச்சிக்கு நாங்கள் ஆதரவளிப்போம். இது,கிழக்குப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும்

பாட்னா-பூர்னியா விரைவுச் சாலை, பக்சர்-பாகல்பூர் நெடுஞ்சாலை, புத்தகயா- ராஜ்கிர்-வைஷாலி- தர்பங்கா நெடுஞ்சாலை, பக்சரில் கங்கை ஆற்றில் ரூ.26,000 கோடி மதிப்பில் கூடுதல் இருவழிப் பாலம் ஆகிய சாலை திட்டங்களுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். பிஹாரில் விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் மாணவர்களுக்கு கடன் தொகையில் 3 சதவீதத்தை வட்டி மானியமாக அரசே நேரடியாக இ-வவுச்சர்களை வழங்கும். விஷ்ணுபாத் கோயில் வழித்தடம், மகாபோதி கோவில் வழித்தடம் ஆகியவை உலகத்தரம் வாய்ந்தயாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா தலங்களாக மாற்றப்படும்.

இவற்றுடன் ராஜ்கிர் மற்றும் நாலந்தாவை முழுமையாக மேம்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாலந்தா பல்கலைக்கழகம் அதன் புகழ்பெற்ற நிலைக்கு கொண்டுவரப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் முக்கிய கூட்டாளியாக உள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என நிதிஷ் கட்சி கோரியது. இதேகோரிக்கையை சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்திகட்சியும் முன்வைத்தது. இருப்பினும், 2012-ம் ஆண்டு அறிக்கையை மேற்கோள் காட்டி, மத்திய அரசு இக்கோரிக்கையை நிராகரித்தது. மாறாக மத்திய பட்ஜெட்டில் தாராள நிதியுதவி அறிவித்துள்ளது.

பிஹாரின் 2 கோயில்கள் சர்வதேச சுற்றுலா மையமாக மாற்றப்படும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது: பிஹார் மாநிலம் கயாவில் உள்ள விஷ்ணுபாத் கோயில் வழித்தடம் மற்றும் புத்த கயாவில் உள்ள மகாபோதி கோயில் வழித்தடம் ஆகியவற்றை சர்வதேச ஆன்மிக மற்றும் சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் வழித்தடம் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டது. இதைப் போலவே பிஹார் மாநிலத்தின் இந்த 2 வழித்தடங்களும் தரம் உயர்த்தப்படும். இதன்மூலம் அப்பகுதியில் முதலீடு அதிகரித்து பொருளாதார நடவடிக்கைகள் ஊக்கம் பெறும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பிஹார் மாநிலம் பால்கு ஆற்றுக்கு அருகே அமைந்துள்ள விஷ்ணுபாத் கோயில் மிகவும் பழமையான இந்து கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. இதுபோல, மகாபோதி கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பகுதியாக விளங்குகிறது.

மேலும் பிஹாரில் உள்ள பழமையான நாளந்தா பல்கலைக்கழகத்துக்கு புத்துயிர் கொடுப்பதுடன், அந்த நகரை சர்வதேச சுற்றுலா மையமா மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல, ஒடிசா மாநிலத்தில் பழமையான கோயில்கள், நினைவுச் சின்னங்கள் இருப்பதால் அவற்றையும் சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE