மத்திய பட்ஜெட் 2024-25: மேம்பாட்டுக்கான முக்கிய அம்சங்கள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: புதிய வரி விகிதத்தை தேர்வு செய்யும் தனிநபர்களுக்கு வருமான வரி நிலைக்கழிவு ரூ.75,000 ஆக அதிகரிக்கப்படுகிறது. ரூ.3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரியில்லை. ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதமும், ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20 சதவீதம், ரூ.15 லட்சத்துக்கு மேல் உள்ள வருமானத்துக்கு 30 சதவீதமும் வரி செலுத்த வேண்டும்.

# 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டு பயிற்சிக்கு பிரதமரின் 5 திட்டங்கள் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

# பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் வீடுகள் கட்டுவதற்கு , மத்திய நிதி ரூ2.2 லட்சம் கோடி உட்பட ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.

# 5 ஆண்டுகளில் ஒருகோடி இளைஞர்களுக்கு, 500 முன்னணி நிறுவனங்களில் தொழில் பழகுநர் வாய்ப்புகள் வழங்கும் வகையிலான விரிவான திட்டத்தை மத்திய அரசு தொடங்கவுள்ளது. அவர்களின் ஓராண்டு பயிற்சியில் மாதம் ரூ.5000 உதவித் தொகை வழங்கப்படும். அதோடு ஒரு முறை நிதியுதவியாக ரூ.6,000 வழங்கப்படும். பயிற்சிக்கான செலவு மற்றும் 10 சதவீத உதவித் தொகையை தொழில் நிறுவனங்கள் தங்கள் சிஎஸ்ஆர் நிதியில் இருந்து அளிக்க வேண்டும்.

# உலக அளவில் இந்தியாவை சுற்றுலா மையமாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும். கயா மற்றும் புத்தகயாவில் உள்ள கோயில்கள் மேம்படுத்தப்படும்.

# விண்வெளி ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது. ரூ. 1000 கோடி ரூபாய் மூலதன நிதியில் விண்வெளி பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் விண்வெளி பொருளாதாரம் 5 மடங்காக அதிகரிக்கும்.

# ஆந்திராவில் புதிய தலைநகர் அமராவதியை கட்டமைக்க சிறப்பு நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்கப்படும்.

# பிஹாரில் நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.26,000 கோடி ஒதுக்கப்படும். வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 11,500 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்.

# அசாம், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவை போன்றவற்றை தடுக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்கவுள்ளது.

# கடன்கள் தவிர மொத்த வருவாய் ரூ.32.07 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த செலவினத் தொகை ரூ.48.21 லட்சம் கோடி

# நிகர வரிவருவாய் ரூ.25.83 லட்சம் கோடி. நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE