ஆறு முறை இடம்பெற்ற தமிழ் உவமைகள் இம்முறை இல்லை: நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் ஏமாற்றம்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ் ஆர்வலர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 முதல் ஆறு பொது பட்ஜெட்களில் இடம்பெற்ற தமிழ் உவமைகள் இந்தமுறை இல்லாமல் போய்விட்டது.

தமிழகத்தின் ஸ்ரீரங்கத்தில் பிறந்த நிர்மலா சீதாராமன் டெல்லியில் படித்து வளர்ந்தவர். இவருக்கு ஆந்திராவை சேர்ந்த பாரகலா பிரபாகர் என்பவருடன் மணமாகி பாரகலா வங்கமாயி என ஒரு மகள் உள்ளார். கடந்த 2014 ஆட்சியில் பாஜகவுக்காக ஆந்திரா மாநிலம் சார்பில் மாநிலங்களவைக்கு முதன்முறையாக நிர்மலா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏனெனில், 2014 மக்களவை தேர்தலுக்கு முன்பாக பாஜகவின் தேசிய செய்தித்தொடர்பாளராக இருந்தவர்.

அப்போது இருந்த ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி மீது இவர் வைத்த கடும் விமர்சனம் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால், எம்.பி-யாகி மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரானார். பிறகு பிரதமர் மோடி அவரை மத்திய நிதியமைச்சராக்க, ஜூலை 5, 2019-ல் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார் நிர்மலா சீதாராமன்.

அப்போது தாம் ஒரு தமிழர் என்பதாலும், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ் மீதான ஆர்வத்தை காட்டும் வகையிலும் பட்ஜெட் உரையில் தமிழ் உவமைக் குறிப்பு இடம் பெற்றது. இதில், நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்த பிசிராந்தையார், பாண்டிய மன்னன் அறிவுடைநம்பிக்கு வரிவிதிப்பின்போது யானையை குறிப்பிட்டு பாடிய பாடலை உவமையாக்கினார். ‘காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே, ‘மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்; நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே, வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்… என்ற பாடலை அமைச்சர் நிர்மலா குறிப்பிட்டிருந்தார்.

இதன் அர்த்தமாக, 'காய்ந்து முதிர்ந்த நெல்லை அறுத்துக் கவளம் கவளமாகத் திரட்டி யானைக்கு உண்ணத் தந்தால் மா அளவினும் குறைந்த நிலத்தினது என்றாலும் அது பல நாளுக்கு வரும். நூறு வயல்கள் என்றாலும் யானை தனித்துப் புகுந்து தின்றால் வாயில் புகுவதைவிடக் காலில் மிதிபட்டுப் பாழாகி விடும்.’ எனக் குறிப்பிட்டவர் அதற்கான விளக்கத்தையும் அளித்தார்.

யானைக்கு உணவாக கவளம் அளிப்பது போல் தம் அரசு வரியை விதிக்கும் எனவும், மாறாக அதை நேரடியாக இறக்கி வயலை சேதத்திற்கு உள்ளாக்காது எனத் தெரிவித்தார். இப்பாடலை பாடிய புலவர் பெயரின் உச்சரிப்பில் லேசாக தடுமாறிய அமைச்சர் நிர்மலாவுக்கு திமுக உறுப்பினர் ஆ.ராசா ‘பிசிராந்தையார்’ என எடுத்துரைத்து உதவினார். இந்த நிகழ்வை எதிர்கட்சி வரிசையில் இருந்தும் தமிழக எம்பிக்கள் மேசையை தட்டி வரவேற்றனர். இதே பட்ஜெட் உரையில் உருது, சம்ஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிகளின் உவமைகளையும் அமைச்சர் நிர்மலா பயன்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு பட்ஜெட் தாக்கல் செய்யும்போதும் திருக்குறள், அவ்வையார் பாடல் உள்ளிட்ட பல தமிழ் உவமைகளை நிர்மலா சீதாராமன் தவறாமல் குறிப்பிட்டு வந்தார். திருக்குறளுக்கு பின் அவ்வையார் பாடலையும் நிர்மலா குறிப்பிடிருந்தார். இதனால், அவர் இந்த முறையும் குறிப்பிட உள்ள தமிழ் உவமை என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் நிலவியது. ஆனால், இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ் உள்ளிட்ட எந்த மொழிக்கான உவமைகளும் இடம்பெறவில்லை. இது தமிழ் உள்ளிட்ட மொழி ஆர்வலர்களுக்கு இடையே பெரும் ஏமாற்றத்தை உண்டாக்கியதாகத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE