மத்திய பட்ஜெட் 2024-ல் விவசாயம், வேளாண் சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் 2024-ல் விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (ஜூலை 23) காலை தாக்கல் செய்தார். அவர் தனது உரையில், “விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்தில் உற்பத்தித் திறனை அதிகரித்தல் மற்றும் பருவகால சவால்களை எதிர்கொள்ளுதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதிக மகசூல் தரக்கூடிய அதேநேரத்தில் காலநிலையை தாங்கக் கூடிய 109 பயிர் ரகங்கள் வெளியிடப்படும். ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தை நோக்கி திருப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்கான சான்றிதழ் வழங்குதல் மற்றும் விளம்பரப்படுத்துதல் ஆதரவை மத்திய அரசு வழங்கும். தேவை உள்ள இடங்களில் 10,000 இயற்கை உள்ளீட்டு வள மையங்கள் அமைக்கப்படும்.

மாநிலங்களுடன் இணைந்து விவசாயத்தில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு செயல்படுத்தப்படும். 400 மாவட்டங்களில் டிஜிட்டல் முறை பயிர் கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்படும். பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களில் தன்னிறைவு அடைய, அவற்றின் உற்பத்தி, சேமிப்பு மற்றும் சந்தைப்படுத்துதலை அரசு பலப்படுத்தும். கடுகு, நிலக்கடலை, எள், சோயாபீன் மற்றும் சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துக்களில் தற்சார்பு அடைவதற்கான உத்தி வகுக்கப்படுகிறது.

முக்கிய நுகர்வு மையங்களுக்கு அருகாமையில் பெரிய அளவிலான காய்கறி உற்பத்தி மேம்படுத்தப்படும். உழவர் உற்பத்தி நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் காய்கறி விநியோகச் சங்கிலிகளுக்கான ஸ்டார்ட்அப்களை மத்திய அரசு ஊக்குவிக்கும்” என்று அறிவித்தார். | வாசிக்க > மத்திய பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE