மத்திய பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வருமான வரி கட்டமைப்பில் மாற்றம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எந்தவித மாற்றமும் மத்திய பட்ஜெட்டில் செய்யப்படவில்லை. நியூ ரெஜீம் எனப்படும் புதிய வரிமுறையை, பின்பற்றுவர்களுக்கு வருமான வரி விகிதத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி, “தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு (ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன்) ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. குடும்ப பென்ஷன் திட்டத்தின் மீதான நிலையான கழிவு ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார். இவற்றின் மூலம் 4 கோடி வருமானதாரர்கள், ஓய்வூதியர்களுக்கு பலன் பெறுவார்கள்” என்றார்.

தனிநபர்களுக்கான புதிய வருமான வரி விகிதங்கள்: “புதிய வரி விகிதத்தை தேர்வு செய்யும் தனிநபர்களுக்கு நிலைக்கழிவு ரூ.75,000 ஆக அதிகரிக்கப்படுகிறது. அடிப்படை வருமானம் ரூ.3 லட்சம் வரை பூஜ்ய சதவீதம் என்ற விகிதம் மாற்றமின்றி தொடரும். அதாவது, ரூ.3 லட்சம் வரை வரி இல்லை. ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதம், ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20 சதவீதம், ரூ.15 லட்சத்திற்கு மேல் உள்ள வருமானத்திற்கு 30 சதவீதம் என வரி விதிக்கப்படுகிறது. இது புதிய வருமான வரி முறையை தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்” என்றார். நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் 2024-25 முக்கிய அம்சங்கள்:

விவசாயிகள் சாகுபடி செய்வதற்காக, உயர் விளைச்சல் தரக்கூடிய மற்றும் அனைத்து பருவ நிலைகளையும் தாக்குப்பிடிக்கக் கூடிய, 109 புதிய பயிர் ரகங்களும், தோட்டக்கலை பயிர்களும் அறிமுகப்படுத்தப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 1 கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தை பின்பற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு இந்த பட்ஜெட்டில் ரூ 1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வீட்டு வசதி திட்டம் – நகர்ப்புறம் 2.0-ன் கீ்ழ், ரூ. 10 லட்சம் கோடி முதலீட்டில் 1 கோடி நகர்ப்புற ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் வீட்டு வசதி தேவை பூர்த்தி செய்யப்படும். 25,000 கிராமப்புற குடியிருப்புகளுக்கு அனைத்து பருவ நிலைகளையும் தாக்குபிடிக்கக் கூடிய இணைப்பு வசதியை ஏற்படுத்த, பிரதமரின் கிராமச்சாலைகள் திட்டத்தின் 4-ம் கட்டம் செயல்படுத்தப்படும்.

புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்க, அனைத்து தரப்பையும் சேர்ந்த முதலீட்டாளர்கள் மீதான ஏஞ்சல் வரி கைவிடப்படுகிறது. முதலீடுகளை ஈர்க்க ஏதுவாக, வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான பெரு நிறுவன வரி 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

கல்விக் கடன்: அரசு திட்டங்கள், கொள்கைகளின் கீழ் பயன்பெற தகுதிபெற இயலாத இளைஞர்களுக்கு உதவும் வகையில், 10 லட்சம் ரூபாய் வரை உயர் கல்விக் கடன் உதவி வழங்கப்படும். ஆண்டுக்கு 3 சதவீத வட்டியில், ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு நேரடியாக இதற்கான மின்னணு ரசீதுகள் வழங்கப்படும்.

‘வாத்சால்யா’ - சிறுவர்களுக்கென ‘வாத்சால்யா’ எனப்படும் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான பங்களிப்பை மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் செலுத்துவார்கள். இத்திட்டத்தில் இணையும் சிறுவர்கள் பருவ வயதை எட்டும் போது, அவர்களது கணக்கை வழக்கமான தேசிய ஓய்வூதிய திட்ட கணக்காக மாற்றிக் கொள்ளலாம்.

பெண்கள் மற்றும் சிறுமிகள் பலனடையும் வகையிலான திட்டங்களுக்கு, இந்த பட்ஜெட்டில் ரூ.3.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்டர்ன்ஷிப் திட்டம்: பெரிய நிறுவனங்களில் அனுபவ பயிற்சி வழங்குவதற்கு அரசு விரிவான திட்டத்தை தொடங்கும். அடுத்த 5 ஆண்டுகளில் 500 பெரிய நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு அனுபவ பயிற்சி வழங்குவதாக இந்த திட்டம் இருக்கும். நிகழ் நிலை வணிகச் சூழல், மாறுபட்ட தொழில், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு இவர்கள் 12 மாத பயிற்சி பெறுவார்கள். இந்த இளைஞர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.6,000 என்பதுடன் மாதந்தோறும் அனுபவ பயிற்சிப் படியாக ரூ.5,000 வழங்கப்படும். இந்த நிறுவனங்கள் பயிற்சிக்கான செலவு ஏற்பதுடன் அனுபவ பயிற்சிக்கான செலவில் 10 சதவீதத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து செலவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் மதிப்பீடுகள் 2024-25: கடன்கள் தவிர மொத்த வருவாய் ரூ.32.07 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது; மொத்த செலவினத் தொகை ரூ.48.21 லட்சம் கோடி
நிகர வரிவருவாய் ரூ.25.83 லட்சம் கோடி; நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆந்திராவுக்கான சிறப்பு நிதி: ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின்படி, அம்மாநிலத்தின் புதிய தலைநகரை உருவாக்க நடப்பு நிதியாண்டில் சிறப்பு நிதியுதவியாக பல்வேறு மேம்பாட்டு முகமைகள் மூலம் ரூ.15,000 கோடி ஒதுக்கப்படும். விசாகப்பட்டினம் - சென்னை தொழில்துறை வழித்தடத்தில் கோப்பர்த்தியில் தொழில்முனையம் அமைக்கப்படும்.

பிஹார் மேம்பாட்டுத் திட்டங்கள்: பிஹாரில் புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள், விளையாட்டு மையங்கள் ஏற்படுத்தப்படும். பிஹாரில் நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.26,000 கோடி ஒதுக்கப்படும். பிஹாரில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 11,500 கோடி ரூபாய் நிதியுதவி. பிஹார் மற்றும் அசாம் மாநிலத்துக்கு வெள்ள நிவாரணப் பணிகளுக்காக பட்ஜெட்டில் தொகுப்பு நிதி ஒதுக்கீடு.

முன்னதாக, புதிய பட்ஜெட்டுட்டுக்கு முறைப்படி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதனைத் தொடர்ந்து சரியாக காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலில் பட்ஜெட் முன்னுரையை வாசித்தார். தொடக்கத்திலேயே மூன்றாம் முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து வரலாறு படைத்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்ததோடு. அரசின் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். சர்வதேசப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவு சூழலிலும் நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்